Published : 23 Dec 2022 04:17 AM
Last Updated : 23 Dec 2022 04:17 AM
ஆம்பூர்: ரூ. 2 கோடி வரி ஏய்ப்பு செய் துள்ளதாக ஆம்பூர் மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு சென்னை வருமான வரித்துறையினர் நோட்டீஸ் வழங்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் பெரியாங்குப்பம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குல்ஜார் (62). மாற்றுத்திறனாளி. இவரது கணவர் உயிரிழந்த பிறகு தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சென்னை தாம்பரம் வருமான வரித்துறை அலுவலகத்தில் வந்திருப்பதாக கூறி 2 பெண்கள், மூதாட்டி குல்ஜார் வீட்டுக்கு வந்தனர்.
அவர்கள், குல்ஜார் ‘ஐ.எஸ்’ எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் நடத்தியதின் மூலம் கடந்த 2020-2021-ம் ஆண்டுக்கான வருமான வரிக்கான கணக்கை தாக்கல் செய்யாமல் ரூ.2 கோடி வரை பாக்கி வைத்துள்ளதாகவும், அந்த பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் வழங்கினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குல்ஜார் தான் எந்த நிறுவனம் நடத்தவில்லை எனக்கூறினார்.
இருப்பினும், இது தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் குல்ஜார் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், தன்னுடைய பான் கார்டு எண்ணை மர்ம நபர் யாரோ ஒருவர் பயன்படுத்தி அதன் மூலம் ஐஎஸ் எண்டர்பிரைசர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி அதன் மூலம் ரூ.2 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அந்த நபர் யாரென கண்டறிய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
புகார் மனுவை பெற்ற ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT