Published : 25 Dec 2016 02:59 PM
Last Updated : 25 Dec 2016 02:59 PM

புத்தகங்கள் வாங்கக் கூட பணம் இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை: முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து

கறுப்பு பணத்தை கட்டுப்படுத்து வதாகக் கூறி புத்தகம் வாங்கக் கூட காசு இல்லாமல் செய்ததுதான் பிரதமர் மோடியின் சாதனை என செங்கல் பட்டில் நடந்த புத்தக திருவிழாவில் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறினார்.

செங்கல்பட்டில் நேற்று முன்தினம் புத்தக திருவிழா தொடங்கியது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:

நெருக்கடி காலகட்டத்தில் வழக் கறிஞராக பதிவு செய்தேன். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பார்த்தசாரதி உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு புத்தகம், செய்தித் தாள்களை படிக்க தரவில்லை. இதை யடுத்து என்னுடைய முதல் வழக்காக சிறையில் இருப்பவர்களுக்கு புத்தகம், செய்தித்தாள்களை படிக்கத் தர வேண்டும் என வாதாடினேன்.

நெருக்கடி நிலை காலத்தில் அனைத்து நீதிபதிகளும் அச்சத்துடன் இருந்த நிலையில், அந்த வழக்கை போட்டபின் கைதிகளுக்கு என்ன உரிமை இருக்கின்றது என நீதிபதி கேட்டார். கைதியையும் மனிதனாக நடத்த வேண்டும். சிறையில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் புத்தகமே சிறந்த நண்பன் என நீதிபதி கிருஷ்ணஐயர் கொடுத்திருந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி வாதிட்டேன். இதனையத்து சிறையில் இருந்த கைதிகளுக்கு செய்தித்தாளும் புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டன.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி தற்போது மோடி செய்துள்ள சாதனை புத்தகம் வாங்கக் கூட காசு இல்லாமல் செய்ததுதான். தற்போது பணத்தின் மதிப்பை இழக்கச் செய்து பல சிறு தொழில்களை நசுக்கியது போல் புத்தக விற்பனையையும் மோடி நசுக்கிவிட்டார். கடந்த வாரம் மும்பையில் விமான நிலையத்தில் ஒரு புத்தகம் வாங்க என்னிடம் பணம் இல்லை . கிரெடிட் கார்டு இருந்தும் அங்கு பயன்படவில்லை.

நம்மிடம் பணம் இல்லாமல் ஆக்கிவிட்டு, அங்கு சிலர் வீட்டில் தங்கம், வெள்ளி புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுக்கின்றனர். பணம் இல்லாத பொருளாதாரம் என யாரைப் பார்த்து சொல்கின்றனர் என தெரியவில்லை.

கோட்டூர்புரம் அண்ணா நூலக கட்டிடம் ஆசியாவிலேயே பெரிய கட்டிடம். இதை கட்டி எழுப்ப 120 கோடி ரூபாய்க்கும் மேல் செலவானது. ஆனால் அந்தக் கட்டிடத்தை இடிக்க சிலர் முயற்சித்தனர். நூலகத்தை இடிக்க வேண்டும் என்ற உணர்வு எங்கிருந்து வருகின்றது. மக்கள் வாங்க முடியாத கருத்துப் பெட்டகத்தை நூலகத்தில் இருந்துதான் பெறமுடியும். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும். இந்த கட்டிடத்தையும் இடிக்க வருகின்றனர் என்றால் நாம் எந்த நாகரீகத்தில் இருக்கின்றோம்.

நூலகங்களுக்கு புதிய புத்தகங் கள் வாங்கி பல ஆண்டுகள் ஆகின் றன. அவை தற்போது பகல் நேர ஓய்விடங்களாக மாறிவிட்டன. இப்படி திட்டமிட்டு புத்தகங்களை தடை செய்வதும், வாசிக்க விடாமல் செய்வதும் நூலகங்களை இடிக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு குழு யோசிக்கும்போது அதற்கு பின்னால் ஒரு அரசியல் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நான்கு வருடங்களாக நூலக இயக்குநர் பதவி காலியாக உள்ளது. இதை நிரப்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. இது நீதிமன்றத்துக்கும் அரசுக்குமான பிரச் னையில்லை மக்களுக்கும் அரசுக் குமான பிரச்னை. இதை நாம் புரிந்து கொண்டால் தான் மக்களுக்கான அதிகாரத்தை நிலைநாட்ட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

குழந்தைகளும் நான்கு பெட்டிகளும்

செங்கல்பட்டு புத்தகத் திருவிழாவில் பேசும்போது முன்னாள் நீதிபதி சந்துரு தனது பேச்சில் குறிப்பிட்டது: குழந்தைகளுக்கு படிக்கும் பழக்கத்தை உருவாக்கிட வேண்டும். குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுத்தால் மட்டும் போதாது. நாமும் அவர்களோடு சேர்ந்து படிக்க வேண்டும். நம்முடைய குழந்தைகளையும் அருகில் உள்ள குழந்தைகளையும் அழைத்து கூட்டாக வாசிப்பு வட்டத்தை உருவாக்கிட வேண்டும்.

தற்போது குழந்தைகளின் வாழ்க்கையை நான்கு பெட்டிகளில் அடக்கிவிடுகின்றனர். ஒன்று கணினி பெட்டி, இரண்டு செல்பேசி பெட்டி, மூன்று தொலைக்காட்சி பெட்டி நான்காவதாக சவப்பெட்டி. இப்படி குழந்தைகள் தனது வாழ்க்கையை நான்கு பெட்டிக்குள் அடைக்காமல் புத்தகத்தை எடுத்து புத்தியை கூர்மையாக்கிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x