

சென்னை: சீனாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் BF.7 என்ற உருமாறிய கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் அங்கு 430 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா, ஹாங்காங் நாடுகளில் உருமாறிய கரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், அதன் பரவும் தன்மை முந்தைய தொற்றுகளை விட வேகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.22) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா பரிசோதனை செய்வது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
முன்னதாக, சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், மருத்துவக் கல்வி இயக்குநர், பொது சுகாதாரத் துறை இயக்குநர், ஊரக நலப்பணிகள் இயக்குநர், தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநர் உட்பட சுகாதாரத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிப்பது, தமிழக விமான நிலையங்களில் பயணிகள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளும் ஏற்பாடுகள் செய்வது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் தொற்று உறுதியாகும் அனைத்து கரோனா மாதிரிகளும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுத்தவும் தமிழக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.