Published : 22 Dec 2022 06:30 AM
Last Updated : 22 Dec 2022 06:30 AM

அதிமுகவை பழனிசாமி அபகரிக்க விடமாட்டோம்: நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். உடன், நிர்வாகிகள் வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்டோர்.படம்: ம.பிரபு

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், பழனிசாமி தரப்பு அதிமுக-வைக் கைப்பற்ற விடமாட்டோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாகத் தெரிவித்தார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழலில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

கட்சிக்கு புதிதாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை வேப்பேரி ஒய்எம்சிஏ அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

மனிதாபிமானம் இல்லாத, சர்வாதிகார நிலையில் இருந்து, தான் வகுத்ததே சட்டம் என்று செயல்படுகிறார் பழனிசாமி. அதிமுகவுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்த தியாகத்துக்காகத்தான் அவருக்கு நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால், சட்ட விதிகளைத் திருத்தி, பொதுச் செயலாளராக முயற்சிக்கிறார் பழனிசாமி. எங்கள் உயிரே போனாலும், கட்சியின் சட்ட விதியைத் திருத்த விடமாட்டோம். அதிமுகவை பழனிசாமி அபகரிக்க அனுமதிக்க மாட்டோம்.

இன்று சில பணக்காரர்களிடம்தான் கட்சி இருக்கிறது. கட்சியின் தலைமை நிலைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தவறாக செலழிப்பதாக தகவல் வருகிறது. முறையாகச் செலவு செய்யாவிட்டால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் கடந்த 7 மாதங்களாக தேவையற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம் என்பதை கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்கள் நன்கு அறிவார்கள்.

மக்களவைத் தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை. மக்களவை தேர்தலில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் என்ன முடிவை எடுத்தார்களோ, அதேபோன்று முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. எனவே, எங்கள் தலைமையில்தான் மக்களவைத் தேர்தல் கூட்டணி அமையும்.

சட்ட விதிகளின்படியும், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படியும், கட்சியும், இரட்டை இலைச் சின்னமும் எங்கள் பக்கம்தான் இருக்கும். இரட்டை இலைச் சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, “ஜெயலலிதாவின் வாரிசாக இருமுறை அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் மீது அதிக அளவு நம்பிக்கை இருந்தது. அதனால் அவரை நாமும் நம்பலாம். ஒரு கட்சியை வழிநடத்த அடக்கம், பணிவு, துணிவு ஆகிய பண்புகள் தேவை. அவை பன்னீர்செல்வத்திடம் உள்ளன. எனவே, நாம் அவர் தலைமையை ஏற்க வேண்டும்” என்றார்.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மகளிரணிச் செயலாளர் ராஜலட்சுமி, மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, கொள்கை பரப்புச் செயலாளர்கள் மருது அழகுராஜ், வா.புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பழனிசாமி தலைமையில்... இதற்கிடையில், வரும் 27-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், உச்ச நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வது, மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்துவதால், இருவர் இணைப்பு என்பது எட்டாக்கனியாகவே இருப்பதாக தொண்டர்கள் கருதுகின்றனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும்போதாவது கட்சி ஒன்றாக இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x