Published : 22 Dec 2022 07:06 AM
Last Updated : 22 Dec 2022 07:06 AM

முதல்வர் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் கிடையாது: அண்ணாமலை கருத்து

கோவை: முதல்வர் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தெரிவித்தார்.

கோவை தெற்கு மாவட்ட பாஜக, அரிமா சங்கம் மாவட்டம் 324-சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு 100 பேருக்கு காது கேட்கும் கருவிகள், செயற்கை கால்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுக்கு மிகப்பெரிய எழுச்சி உருவாகியுள்ளது. 70 ஆண்டுகளாக தமிழகத்தில் ஊழல் செய்து வருகின்றனர். ஊழலை பற்றி பேசும் கட்சிக்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். பேசுபவர்களுக்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். இன்றைக்கு அதுபற்றி பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் திமுகவினர், பாஜவுக்கு இவ்வளவு வாய்ப்புகளை அளிக்க மாட்டார்கள். ஆனால், தற்போது வாய்ப்புகளை உருவாக்கி அளிக்கின்றனர்.

ரபேல் கைக்கடிகாரத்தை பற்றி டீ கடைகளில் பேசும்போது அந்த கைக்கடிகாரத்தின் ரசீதை வெளியிடுவேன். அதுவரை பொறுமையாக இருக்கப்போகிறேன். இதுபற்றி அவர்கள் நிறைய பேச வேண்டும். அனைத்து அமைச்சர்களும் இதுபற்றி பேச வேண்டும்.

பொதுமக்கள் திமுகவின் ஊழல் குறித்து புகார் தெரிவிக்க ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். திமுக குடும்பத்தின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி என்பது குறைவோ என்று எனக்கு தோன்றுகிறது. ஏப்ரல் மாதம் பாத யாத்திரை தொடங்கும்போது சொத்து பட்டியலை வெளியிடுவோம். அப்போது, அதன் மதிப்பானது நிச்சயம் 2 லட்சம் கோடியை தாண்டியிருக்கும்.

பாஜக மட்டும்தான் இதைப்பற்றி பேச தகுதியான கட்சி. முதல்வர் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் கிடையாது. ஒவ்வொரு அமைச்சரின் சொத்துப்பட்டியலையும் தனித்தனியாக வெளியிடுவோம்.

ஏப்ரல் மாதத்துக்குள் பாஜக பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024-ல் திமுகவுக்கு பாஜகவால் முடிவுரை எழுத முடியும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x