Published : 28 Dec 2016 08:52 AM
Last Updated : 28 Dec 2016 08:52 AM

கடலாடி அருகே கூட்டுறவு வங்கியில் 6 கிலோ நகைகள் மாயம்: தலைவர் உள்ளிட்ட 3 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.1.20 கோடி மதிப்புள்ள நகைகளை மோசடி செய்த தலைவர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செயலரைத் தேடி வருகின்றனர்.

கடலாடி வட்டம் ஏ.புனவாசல் கிராமத்தில் க்யூ.1193 என்ற தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் (தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி) செயல்படுகிறது. இக்கடன் சங்கம் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன், நகைக் கடன், பயிர் இன்சூரன்ஸ் காப்பீடு பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்கடன் சங்க செயலராக சித்திரங்குடியைச் சேர்ந்த நாராயணன், இவரது தம்பி தங்கப்பாண்டி எழுத்தராகவும் பணியாற்றி வருகின்றனர். இங்கு கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து நகைக் கடன் வைத்தவர்கள் திருப்பச் சென்றால், நகையை திருப்பித் தராமல் செயலர் தாமதித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக இக்கூட்டுறவு வங்கி பூட்டப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த மக்கள் கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இருந்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனையடுத்து 2 வாரங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கடந்த வாரம் கூட்டுறவு துணைப்பதிவாளர் ஜெயசிங் விசாரணை செய்தார். விசாரணையில் வங்கி லாக்கர் அறையின் சாவியை தலைவர், செயலர் ஒப்படைக்காமல் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்த மற்றொரு சாவியை பயன்படுத்தி போலீஸ் பாதுகாப்புடன் பெட்டகத்தைத் திறந்து பார்த்தார். ஆனால் பெட்டகத்தில் எந்த நகையும் இல்லை.

இதுகுறித்து துணைப்பதிவாளர் ஜெயசிங் கூறியதாவது: 140 நகைக் கடன்தாரர்களின் 6.198 கிலோ எடை கொண்ட நகைகள் பெட்டகத்தில் இருக்க வேண்டும். இதன் மதிப்பு ரூ.1,20,87,000 ஆகும். இந்த நகைகள் அனைத்தும் மோசடியாக எடுத்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து செயலர் நாராயணன், வங்கியின் முன்னாள் தலைவர் லி.ஆண்டி, தற்போதைய தலைவர் ரா.காளிமுத்து, எழுத்தர் தங்கப்பாண்டி ஆகியோர் மீது கடலாடி போலீஸில் புகார் செய்துள்ளோம் என்றார்.

இந்நிலையில் கடலாடி. இன்ஸ்பெக்டர் முத்துராஜ், 4 பேர் மீதும் கையாடல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தார். இதில் ஆண்டி (50), ரா.காளிமுத்து, தங்கப்பாண்டி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தார். செயலர் நாராயணனை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x