Published : 22 Dec 2022 06:13 AM
Last Updated : 22 Dec 2022 06:13 AM
சென்னை: சமூகத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் வங்கிகள், கடன் வழங்குவதை பரவலாக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) சார்பில், மாநில அளவிலான கடன் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. நபார்டு வங்கியின் பொதுமேலாளர் கே.இங்கர்சால் வரவேற்புரை ஆற்றினார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து விழாவில் அமைச்சர் பேசியதாவது: வளரும் பொருளாதாரத்துக்கு கடன் என்பது மிகவும் அவசியமாக உள்ளது. வங்கிகள் கடன்வழங்குவதில் தங்களது இலக்கைஅடைந்துள்ளன. அதேசமயம், சமூகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் கடனைபரவலாக்க வேண்டும். இதன்மூலம், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படும்.
கடன் கொடுப்பதில் தொழில்நுட்பம் இன்றைக்கு பெரும் பங்குவகிக்கிறது. கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தொழில்நுட்ப வசதி காரணமாக தமிழக அரசு தகுதியானவர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்தது. இதன் மூலம், அரசுக்கு பெரும் செலவு மிச்சமானது.
தமிழக அரசு வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருகிறது. கிராமப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நபார்டு வங்கி கடன் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சமூக நீதியும், பொருளாதார நீதியும் வெவ்வேறானவை. சமூக நீதி என்பது அனைவரையும் சமமாகப் பார்ப்பது. ஆனால், பொருளாதார நீதி என்பது கண்களைத் திறந்து பார்க்க வேண்டும். பொருளாதார நீதியை அடைய தரவுகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவது அவசியம். இதன்மூலம் சரியான நபருக்கு சரியான முறையில் சரியான திட்டங்கள் சென்றடையும் என்றார்.
நபார்டு வங்கியின் தலைமைப்பொதுமேலாளர் டி.வெங்கட கிருஷ்ணா பேசும்போது, ‘‘தமிழகத்தில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு கடன் வழங்கலாம் என்பது குறித்த வளம் சார்ந்த அறிக்கையை நபார்டு வங்கி தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன்மூலம், வங்கிகள் அடுத்த ஆண்டுக்கான தங்களது கடன்திட்டங்களை தயாரிக்க முடியும்.
வரும் 2023-24-ம் நிதியாண்டில் தமிழகத்தில் உள்ள முன்னுரிமை துறைகளுக்கு ரூ.4.93 லட்சம் கோடிகடன் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது கடந்த 2022-23-ம்ஆண்டுக்கான ரூ.4.13 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகமாகும்.
குறிப்பாக, விவசாயத்துக்கு ரூ.2.18 லட்சம் கோடியும் (46%), சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.1.68 லட்சம் கோடியும்(36%) மற்றும் பிற துறைகளுக்கு ரூ.1.06 லட்சம் கோடியும் (18%) கடன் வழங்க வாய்ப்புகள் உள்ளன.
நபார்டு வங்கி தமிழக அரசுக்கு கடந்த 2021-22-ம் ஆண்டு ரூ.32,500கோடி கடனுதவி செய்தது. இதுநடப்பாண்டில் ரூ.40 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இக்கருத்தரங்கில், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் மகேஷ்குமார் பஜாஜ், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.மதி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நபார்டு வங்கியின் பொதுமேலாளர் என்.நீரஜா நன்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT