கணக்கில் காட்டாத பணத்தை வரும் 30-ம் தேதிக்குள் முதலீடு செய்யலாம்: வருமான வரித்துறை அறிவிப்பு

கணக்கில் காட்டாத பணத்தை வரும் 30-ம் தேதிக்குள் முதலீடு செய்யலாம்: வருமான வரித்துறை அறிவிப்பு
Updated on
2 min read

‛பிரதம மந்திரி ஏழைகள் நலத்திட்டம் 2016-ன் கீழ் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் வைத்திருப்பவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் அத்தொகையை வங்கிகளிலோ, தலைமை அஞ்சல், துணை அஞ்சல் நிலையங்களில் முதலீடு செய்யலாம்’ என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''பிரதம மந்திரி ஏழைகள் நலத்திட்டம் 2016-ன் முக்கிய நோக்கம் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக திரட்டப்பட்ட கறுப்பு பணத்தை வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்துவதாகும். இத்திட்டத்தின் கீழ் எந்த ஒரு நபரும் ரொக்கமாகவோ, முதலீடாகவோ ரிசர்வ் வங்கிகள் மற்றும் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949-ன் விதிமுறைகளுக்குப் பொருந்தும் கூட்டுறவு வங்கிகள், தலைமை அஞ்சல் அலுவலகம் அல்லது துணை அஞ்சல் அலுவலகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்திலும் உள்ள தனது கணக்கில் காட்டப்படாத வருமானத்தை அறிவிக்கலாம்.

கணக்கில் காட்டப்படாத ரொக்கம் வைத்திருப்பவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் அத்தொகையை வங்கிகளிலோ, தலைமை அஞ்சல், துணை அஞ்சல் நிலையங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கும் நபர் தனது கணக்கில் காட்டப்படாத வருமானத்தில் 30 சதவீதம் வரி, வரியில் 33 சதவீதம் கூடுதல் வரி மற்றும் மறைக்கப்பட்ட வருமானத்தில் 10 சதவீதம் அபராதம் உட்பட மொத்தம் 49.9 சதவீதம் செலுத்த வேண்டும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டாத வருமானத்தின் 25 சதவீத தொகையை பிரதம மந்திரிகள் ஏழை நல முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டாய வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். அத்தொகையானது நான்கு ஆண்டுகள் காலத்துக்கு முதலீடு செய்யப்பட வேண்டும். இவ்விதமான வைப்பீட்டுக்கு வட்டி எதுவும் வழங்கப்பட மாட்டாது.

2017 மார்ச் 31-ன் படியான கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத ரொக்கம் அல்லது வைப்புகள் பற்றி அங்கீகரிக்கப்பட்ட படிவத்தில் அறிவிப்பு செய்ய வேண்டும். பிரதம மந்திரி ஏழைகள் நல முதலீட்டுத் திட்டத்தில் செய்யப்படும் 25 சதவீத வைப்புத் தொகைக்கான அத்தாட்சி வரி, கூடுதல் வரி மற்றும் அபராதம் (மொத்தம் 49.9 சதவீதம்) செலுத்தியதற்கான அத்தாட்சியுடன் இணைக்கப்பட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தெரிவிக்கப்படும் வருமானம் எந்தவொரு மதிப்பீட்டு ஆண்டுக்கும் வருமானவரிச் சட்டத்தின் கீழ் அறிவிப்பாளரின் மொத்த வருமானத்தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.

காபிபோசா 1974 சட்டத்தின் கீழ் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டவர்கள், 1991-92 பங்கு பத்திர ஊழல் தொடர்பாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள், இந்திய தண்டனை சட்டம், போதைப் பொருள் தடுப்புச் சட்டம் 1974, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967, ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பினாமி சொத்து பரிவர்த்தனைகள் தடுப்பு சட்டம் 1988, பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் தண்டனைக்கு உள்ளாக நேரிடுவோர், வெளிக்காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் வைத்திருப்போர் இத்திட்டத்தின் வரம்பிற்குள் வர இயலாது.

திட்டத்தின் கீழ் அறிவிப்பு செய்ய தவறவிடுவதின் பின்விளைவுகள்

இத்திட்டத்தின் கீழ் வர விரும்பாத நபர், மதிப்பீட்டு ஆண்டு 2017-18 முதல் வரிப் படிவத்தில் அத்தகைய கணக்கில் காட்டப்படாத ரொக்கம் அல்லது வைப்பு நிதியை தெரிவிக்கலாம். ஆனால், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் அல்லது வைப்பு நிதியின் 60 சதவீதம் வரி மற்றும் கூடுதல் வரி சேர்த்து 77.25 செலுத்த நேரிடும்.

அவ்வாறு 2017-18 கணக்கீட்டு ஆண்டு முதல் ஒருவர் தானாக கணக்கில் காட்டப்படாத வருமானத்தைத் தெரிவிக்காத நிலையில் பின்னர் வருமான வரித்துறை ஆய்வின் போது அதனைக் கண்டுபிடித்தால் 60 சதவீதம் வரி மற்றும் கூடுதல் வரி மற்றும் செஸ் தவிர்த்து 10 சதவீதம் அபராதம் என்று மொத்தமாக 83.25 சதவீதம் வரி செலுத்துவதோடு பொருளாதார குற்றங்களுக்கான சட்டநடவடிக்கையையும் எதிர்கொள்ள நேரிடும்.

மேற்கண்ட எந்த முறையிலும் ஒருவரின் கணக்கில் காட்டப்படாத வருமானம் வௌிப்படாமல் பின்னர் வருமான வரித்துறை சோதனையின் போது அதனைக் கண்டு பிடித்தால் 77.25 சதவீதம் வரியைத் தவிர்த்து 30 சதவீதம் அல்லது 60 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில், அவர் செலுத்தும் வரி மற்றும் அபராதமானது அவரது வருமானத்தில் 107.25 அல்லது 137.25 சதவீதமாக இருக்கும்'' தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in