5 மாதங்களாக தொடர் மழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில் கடும் பாதிப்பு: திணறும் விவசாயிகள்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நின்ற நிலையிலும் ரப்பர் பால் வெட்டும் தொழில் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. ஒரு கிலோ ரப்பர் ரூ.122 என விலை சரிந்ததால் ரப்பர் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுரப்பர் தோட்டங்களில் அதிகபட்சமாக 2,000 தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். அதேநேரம் தனியார் எஸ்டேட் மற்றும் தோட்டங்கள், 10 சென்ட் முதல்ஒரு ஏக்கர் வரையுள்ள சிறிய தோட்டங்களில் ரப்பர் பால் வெட்டுதல், தோட்டங்களை பராமரித்தல், ரப்பர் ஷீட் பதப்படுத்தி எடுத்தல், ஏற்றுமதி செய்தல் என 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

தொடர்ச்சியாக கடந்த 5 மாதங்களாக பெய்து வந்த மழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. மாதம் 5 நாட்கள் கூட ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்துள்ளனர். அத்துடன் ரப்பர் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரப்பர் ரூ.125 ஆக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ரூ.122-க்கு விற்பனை ஆனது.

இது குறித்து, குலசேகரத்தை சேர்ந்த ரப்பர் விவசாயி நெல்சன் கூறியதாவது: கரோனா காலத்தில் கூட படாத கஷ்டங்களை கடந்த 5 மாதங்களாக ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். மழை நேரத்தில் ரப்பர் பால் வெட்டுவது எப்போதும் முடங்குவது உண்டு. ஆனால் மழை அதிகபட்சமாக 3 வாரம் வரை இருக்கும். அதன் பின்னர் அதிக அளவில் பால் கிடைக்கும்.

நடப்பாண்டு தொடர்ச்சியாக 5 மாதங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். நடப்பாண்டு ஒரு கிலோ ரப்பர் பால் ரூ. 200-க்கு மேல் விலைபோனது. கடந்த மாதம் ரூ.145 என குறைந்தது. தற்போது ரூ.125-க்கும் குறைவாக விற்பனை ஆகிறது. விலை வீழ்ச்சியால் தோட்டத்தை பராமரிக்க ஆகும் செலவு கூட கிடைக்கவில்லை.

ரப்பர் பால் வெட்டுவதற்கு மட்டும் ஒரு மரத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 2 கூலி வழங்க வேண்டும். பாலை பதப்படுத்தி உலரவைத்து மிஷினில் ஷீட்டாக அடித்து எடுப்பதற்கும் தனியாக செலவு உள்ளது. இந்நிலையில் விலை குறைந்துள்ளதால் பெரும்பாலான மரங்களில் ரப்பர் பால் வெட்டுவதை நிறுத்தியுள்ளோம்.

வழக்கமாக ரப்பர் பால் வெட்டும் தொழிலாளிகள் இரவு 12 மணிக்கு மேல் தலையில் பேட்டரி லைட்களை கட்டிக்கொண்டு ரப்பர் பால் வெட்டும் பணியைத் தொடங்கி அதிகாலையில் முடிப்பர். இதன் மூலம் தினமும் ரூ.2,000 வரை வருவாய் ஈட்டுவார்கள். தற்போது பால் வெட்டும் பணி முடங்கியதால் தொழிலாளர்கள் முதல் ரப்பர் எஸ்டேட் உரிமையாளர்கள் வரை அனைவரும் வருவாய் இழந்துள்ளனர்.

ரப்பர் விலை வீழ்ச்சியை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். கிலோ ரூ.100-க்கு கீழ் ரப்பர் விலை சரிந்தால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மரங்களை அழித்து ரப்பர் தோட்டங்களை பலர் ரியல் எஸ்டேட்களாக மாற்றியது போன்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in