விமான நிலையங்களில் கரோனா பரிசோதனைக்கு வழிகாட்டுதல்கள் தேவை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சீனாவில் BF 7 எனும் ஒமைக்ரான் திரிபு வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் 1.48 லட்சம் பேருக்கு கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கவனத்தில் கொண்டு உலகம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை சார்பிலும் அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்கவும், பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், மத்திய பொது சுகாதாரப் பணிகள் இயக்குநரகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அந்தக் கடிதத்தில் தமிழகத்தில் ஏற்கெனவே 97 சதவீதம் முதல் தவணை, 92 சதவீதம் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன. கரோனாப் பரவலைப் பொருத்தவரை தமிழகம் மிகவும் பாதுகாப்பான மாநிலமாகத்தான் உள்ளது. எனவே, இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தமிழக விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in