

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் நீதிபதி ஒருவர் சாமி தரிசனத்திற்கு சென்றபோது டிக்கெட் விற்பனையில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில், 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பாடியில் உள்ள கைலாசநாதர் கோயில் மற்றும் திருவாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (டிச.21) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோயில்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "திமுக ஆட்சிக்கு வந்தபின் 38 மாவட்ட குழுக்கள் கோயில்களில் அறங்காவலர் நியமிக்கப்பட வேண்டியிருந்தது. இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவந்து 16 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2000-க்கும் மேற்பட்ட கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடபழனி முருகன் கோயிலில் நீதிபதி ஒருவர் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்ய சென்றபோது, பணியில் இருந்த அறநிலையத் துறை அலுவலர்கள் டிக்கெட் விற்பனையில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில், அந்தப் புகார் தொடர்பாக அறநிலையத் துறை அலுவலர்கள் ரேவதி, ரவி ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மீஞ்சூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அவர் கூறினார்.