

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், ஓபிஎஸ் போட்டி பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது. ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் பழனிசாமி தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஓபிஎஸ் தனது பலத்தை காட்டும் வகையில், அதிமுகவின் 75 மாவட்டங்கள் மற்றும் இதர அணிகளில் தனது ஆதரவு நிர்வாகிகளை நியமித்தார். குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.
இந்த நியமனத்தை தொடர்ந்து, அவர் தன் தரப்பு நிர்வாகிகளுடன் பொதுக்குழு கூட்டத்தை நடத்திக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளார். இதன் முன்னோட்டமாக அவர், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தை இன்று சென்னையில் கூட்டியுள்ளார்.
கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஏற்பாட்டில் கூட்டப்படும் இக்கூட்டத்தில், 88 மாவட்ட செயலாளர்கள் , நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதன்மூலம் அவர் நியமித்த புதிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். அத்துடன், ஏற்கெனவே பழனிசாமி நடத்திய பொதுக்குழுவை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதால், தன் தரப்பிலும் போட்டி பொதுக்குழுவை நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதவிர, போட்டி பொதுக்குழுவில் ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளர் என்பதை அறிவிக்கவும், அதிமுகவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வழிநடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாகவும், மேலும், பல முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்புகளையும் கூட்ட முடிவில் ஓபிஎஸ்அறிவிப்பார் என அவரது ஆதரவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பொதுக்குழு நடத்தி ஜெ.வை நிரந்தர பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற திட்டம்.