

குரோம்பேட்டை: விளையாட்டுத் துறையில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பொறுப்பேற்றார். இதனையொட்டி விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உதயநிதி நேற்று சந்தித்தார்.
அப்போது அமைச்சரிடம் சங்கரய்யா கூறியதாவது: விளையாட்டுத் துறையில் தமிழகத்தை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுங்கள். இந்தியாவின் சார்பில் தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பதக்கங்களை வெல்லும் வகையில் பயிற்சி அளியுங்கள். அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுத் துறையை மேம்படுத்துங்கள். நீங்கள் நிர்வகிக்கும் அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வரும் மார்க்ஸிய அறிஞருமான இஎம்எஸ் நம்பூதிரிபாட் எழுதிய புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார். இந்நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.