கோயிலில் காப்பு கட்டும் பூஜையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு தொடங்கியது

கோயிலில் காப்பு கட்டும் பூஜையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு தொடங்கியது
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் அருகே காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் விழாவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த விழாவையொட்டித்தான், ஜல்லிக்கட்டு போட்டியை ஊர் மக்கள் திரண்டு நடத்துகிறார்கள்.

இப் போட்டியை தொடங்கிவைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரை அழைக்க ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர். போட்டியில் சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார்கள், மற்ற வீரர்கள், நின்று விளையாடும் காளைகளுக்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஏராளமான பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்தப் போட்டியை, வாடிவாசல் அருகே உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டுதான் ஊர் மக்கள் நடத்துகின்றனர். நேற்று நடந்த இக்கோயில் விழா காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஊர் மக்கள், ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஜல்லிக்கட்டில் இக்கோயிலின் காளைகள்தான் வாடிவாசலில் இருந்து முதலாவதாக அவிழ்த்து விடப்படும். இக்கோயில் திருவிழா தொடங்கியதையொட்டி, 15 நாட்கள் மாடுபிடி வீரர்கள், ஊர் மக்கள் காப்பு கட்டி விரதம் இருப்பர்.

ஜனவரி 3, 4-ம் தேதிகளில் இக்கோயில் திருவிழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 17-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும். இதையொட்டி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் நேற்று முதலே தொடங்கி விட்டனர்.

அமைச்சர் ஆலோசனை: இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகளுடன் சென்னை நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில், நாளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்த உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in