

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 5 பேரை 9 நாள் காவலில் விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் என்ஐஏவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்.23-ல் காரில் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின் (28) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேசிய புலனாய்வு (என்ஐஏ) முகமை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இதில், தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (26) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கோவை போத்தனூரைச் சேர்ந்த முகமது தவ்பிக் (25), நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த உமர் பாரூக் (39), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ்கான் (28) ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முகமது அசாரூதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பேரோஸ்கான் ஆகிய 5 பேரை 10 நாள் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை பல முறை தள்ளி வைக்கப்பட்டது.
29-ல் ஆஜர்படுத்த வேண்டும்: இந்நிலையில், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 5 பேரையும் 9 நாட்கள் காவலில் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். 5 பேரையும் மீண்டும் வரும் 29-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் தனி இடத்தில் வைத்து கோவை சிலிண்டர் வெடிப்பு குறித்தும், சதித் திட்டம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.