

ஈரோடு: ஈரோடு மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 243 பணியிடங்களுக்கு, 12 ஆயிரத்து 137 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தற்போது நேர்காணல் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 233 விற்பனையாளர்கள், 10 கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக 12 ஆயிரத்து 137 பேர் விண்ணப்பித்துள்ளனர். இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப் பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த 15-ம் தேதி திண்டலில் உள்ள ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை மையத்தில் தொடங்கியது.
ஒரு நாளைக்கு 1,500 பேர் வீதம், வரும் 24-ம் தேதி வரை நேர்காணல் நடக்கவுள்ளது. ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜ்குமார் தலைமையிலான அலுவலர்கள் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். நேர்காணலில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.