Published : 21 Dec 2022 04:10 AM
Last Updated : 21 Dec 2022 04:10 AM

விலை குறைந்துள்ள நிலையில் தக்காளியில் நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பாதிப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மண்டியில் தொழிலாளர்கள் தக்காளி பழங்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விலை குறைந்துள்ள நிலையில் நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக் கோடு, பென்னாகரம் உள்ளிட்ட அனைத்து தாலுகாக்களிலும் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தக்காளியின் விலை குறைந்துள்ள நிலையில், தக்காளியில் தற்போது நோய் தாக்கம் அதிகரித்து மகசூல் பாதிப்படைந்து வருகிறது. எனவே, விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து, பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் உள்ளிட்ட தக்காளி விவசாயிகள் கூறியது: தக்காளிக்கு எப்போதுமே நிலையான விலை கிடைப்பதில்லை. சில மாதங்களில் கட்டுப்பாடியாகும் நிலையிலும், சில மாதங்களில் ஓரளவு லாபம் கிடைக்கும் வகையிலும் விலை நிலவரம் அமையும். இதற்கிடையில் அவ்வப்போது திடீரென கடுமையான விலை வீழ்ச்சி ஏற்படும். அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ ரூ.5 என சரிந்தது.

இதுபோன்ற நேரங்களில் மொத்த வியாபாரமாக வயல்களில் வந்து தக்காளி வாங்கிச் செல்லும் வியாபாரிகள் ரூ.5-க்கும் குறைவான விலையையே வழங்குவர். அடுத்த சில வாரங்களில் விலை ஏற்றம் காணும் என்ற நம்பிக்கையில், நடவு செய்த வயலை பராமரிப்பின்றியும், அறுவடை செய்யாமலும் விட விவசாயிகளால் எளிதில் முன்வர முடியாது. அதனால் தான் விலையிறக்க காலத்திலும் சந்தைக்கு தக்காளி வரத்து குறையாமல் நீடிக்கும்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடும் வீழ்ச்சியடைந்த விலை தற்போது படிப்படியாக அதிகரித்து வந்தாலும் கூட கிலோ ரூ.18-க்குள் தான் விற்பனையாகிறது. இப்படி விலையிறக்கக் காலத்தை கடந்து வர முடியாமல் தக்காளி விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் பனியின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது தக்காளியில் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது.

அறுவடை முடியும் நிலையில் உள்ள வயல்களில் நோய் பாதித்தால் கூட பொருளாதார பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால், அறுவடை தொடங்கும் தருவாயில் உள்ள வயல்கள், பூ விடும் பருவத்தில் உள்ள வயல்கள், நடவு செய்து ஓரிரு வாரங்களே ஆன வயல்கள் என அனைத்திலும் நோய்த் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த நெருக்கடிகளால் தக்காளி விவசாயிகள் மனம் நொடிந்துள்ளோம். இதுபோன்ற சூழல்களில் தக்காளி விவசாயிகளின் வேதனையை தவிர்க்கும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். பனியின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது தக்காளியில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x