Published : 21 Dec 2022 06:01 AM
Last Updated : 21 Dec 2022 06:01 AM
சென்னை: வீட்டுமனை வரன்முறை சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்படும் என்று தமிழக வீட்டுவசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பு நிறுவனர் ஆ.ஹென்ரி வரவேற்றுப் பேசும்போது, ``முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பத்திரப் பதிவை எளிமைப்படுத்த வேண்டும். பத்திரப் பதிவு செய்வதற்கான டோக்கன் முறையில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை அங்கீகரிப்பதற்கான சிறப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கட்டிடத் திட்ட அனுமதி, நிலை வகைப்பாடு மாற்றம், மனை உட்பிரிவு, வீட்டுமனைக்கான அங்கீகாரத்தை எளிமையாக்கவேண்டும். அணுகு சாலைக்கான விதிகளைத் தளர்த்த வேண்டும்'' என்றார்.
அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது: பல்வேறு சங்கங்கள் தெரிவிக்கும் ஆலோசனையின் பேரில், அரசு பல முக்கிய முடிவுகளை எடுக்கிறது. நிறைய கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளன. அவற்றை வரைமுறை செய்வதில் சிக்கல்கள் உள்ளன. சட்டத்துக்கு உட்பட்டு கட்டப்படாத கட்டிடங்கள் இடிக்கப்படும். எனவே, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அப்போது, கட்டிடங்கள், மனைப் பிரிவுஅனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இருக்கும். இதை எங்கள் துறைகண்காணிக்கும் என்று அரசுத் தரப்பில் உத்தரவாதம் வழங்கஉள்ளோம்.
வீட்டுமனை வரன்முறை சட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்று, கால அவகாசம் 6 மாதங்கள் நீட்டிக்கப்படும். மற்ற கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பேசினார்.
விழாவில், வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, சிஎம்டிஏ அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ்,புலவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT