Published : 21 Dec 2022 06:18 AM
Last Updated : 21 Dec 2022 06:18 AM

இந்துஸ்தான் பல்கலைக்கு வேந்தர் நியமனம்

ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ்

சென்னை: இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் (ஹிட்ஸ்) வேந்தராக, சிறந்த கல்வியாளரும், விமானியும், சிந்தனையாளருமான ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் டிச.15-ம் தேதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஹிட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்துஸ்தான் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகமாகும். மறைந்த கேசிஜி வர்கீஸ் மற்றும் நிறுவனர் தலைவர் எலிசபெத் வர்கீஸ் ஆகியோரால் 1985-ம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. 2008-09-ல் இது பல்கலைக்கழக மானியக் குழுவால் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.

இங்கு பொறியியலில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்கள், சட்டம், வடிவமைப்பு, கட்டிடக்கலை, நகர திட்டமிடல், கலை மற்றும் அறிவியல், மேலாண்மை, வணிகம், அலைடு ஹெல்த் சயன்ஸ் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.

இவை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தேசியஅங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்துஸ்தான் பல்கலை.க்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் `ஏ' மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இக்கல்வி நிறுவனத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த்ஜேக்கப் வர்கீஸ் பி.எஸ். இன்ஜினியரிங் மேனேஜ்மென்ட் மற்றும் எம்பிஏ, தென் கொரியாவின் சியோலில் உள்ள புகழ்பெற்ற டோங்குக்பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். இவர் ஹார்வர்ட் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் நிபுணத்துவ நிர்வாக மேலாண்மை திட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். ஓரியன்ட் ஃப்ளைட்ஸ் ஏவியேஷன் அகாடமியின் தலைவராகவும் உள்ளார்.

இந்துஸ்தான் கல்விக் குழுமத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 3 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், 1,25,000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் உள்ளனர்.

ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் இந்நிறுவனத்தின் தலைமை மற்றும் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருப்பார். இப்பல்கலை. கல்வித் திட்டங்கள், ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் ஒருமுன்னணி நிறுவனமாக இருக்க தனது 27 ஆண்டு நிர்வாகத் திறனை சிறப்புடன் பயன்படுத்துவார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x