

சென்னை: சென்னை, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பாக மாநில அளவிலான 47-வது வல்லுநர் குழுக் கூட்டம், துறையின் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை, வில்லிவாக்கம் வினை தீர்க்கும் விநாயகர் திருக்கோயில், மேற்கு மாம்பலம் சத்ய நாராயண பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர் பஜார் ரோடு மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி அகத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட 114 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பணிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் தொடங்கவுள்ளன. ஆகம வல்லுநர்கள் கே.சந்திரசேகர பட்டர், கோவிந்தராஜ பட்டர்,ஆனந்த சயன பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.