Published : 21 Dec 2022 06:27 AM
Last Updated : 21 Dec 2022 06:27 AM
சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் எம்ஜிஎம் நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத் துறையின் விசாரணையில் தலையிட முடியாது என மறுப்புதெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், எம்ஜிஎம் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
பிரபல எம்ஜிஎம் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவருமான எம்ஜிஎம் மாறன், தற்போது சைப்ரஸ் நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது தம்பி எம்ஜிஎம்ஆனந்த் இயக்குநராக உள்ள சென்னையில் உள்ள சதர்ன் அக்ரிப்யூரேன் இண்டஸ்ட்ரீஸ் என்ற மதுபான தொழிற்சாலையின் மூலம் கிடைத்த வருவாயில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ரூ.216.40 கோடியை மாறன் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக அந்நியச் செலாவணிமேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்த அமலாக்கத் துறை, இந்தியாவில் எம்ஜிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி வைத்துள்ளது.
இதனிடையே, ஏற்கெனவே அமலாக்கத்துறையில் எம்ஜிஎம் மாறனுக்கு எதிராக நிலுவையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தொடர்பான வழக்கு விசாரணையை மறைத்து, ஆக்ஸிஸ்வங்கிக்கு உறுதிமொழி படிவம் கொடுத்ததாகவும், அதன் காரணமாக ரூ.216.40 கோடியை ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் மற்றும் முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் நேரடியாக முதலீடு செய்ய எம்ஜிஎம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்த ஆக்சிஸ் வங்கி நிர்வாகம், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளது. அதன்காரணமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், எம்ஜிஎம் நிறுவனத்துக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம்: இந்நிலையில், அமலாக்கத் துறையினர் எம்ஜிஎம் நிறுவனத்துக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு தடை கோரி எம்ஜிஎம் நிறுவனம் சார்பில் எம்ஜிஎம் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மனுதாரர் நிறுவனம் தரப்பில்மூத்த வழக்கறிஞர் பி.குமார், அமலாக்கத் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மனுதாரர் நிறுவனத்துக்கு எதிராக சட்டவிரோதப் பணப்பரிமாற்றதடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறைநடத்தி வரும் விசாரணைக்கு இடையூறாக முட்டுக்கட்டை போடவோ தலையீடு செய்யவோ முடியாது.
எனவே, இந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்படுகிறது. அதேநேரம், மனுதாரர்தங்களது விளக்கத்தை அமலாக்கத்துறையிடம் சமர்ப்பிக்கலாம். அமலாக்கத்துறையும் சட்டத்துக்குட்பட்டு விசாரணை நடத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT