Published : 21 Dec 2022 06:33 AM
Last Updated : 21 Dec 2022 06:33 AM
சென்னை: அண்ணா மேம்பாலத்தை ரூ.8.85 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.
ஜெமினி மேம்பாலம் என அழைக்கப்படும் அண்ணா மேம்பாலம் சென்னையின் மையப்பகுதியில், 5 சாலைகள் சந்திப்பில் அண்ணா சாலையில் உள்ளது. 600 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலத்தை கடந்த 1971-ம் ஆண்டு ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1973-ம்ஆண்டு ஜூலை 1-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.
சென்னையின் முதல் மேம்பாலம்: இது சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமாகும். மேலும், நாட்டிலேயே மூன்றாவதாக கட்டப்பட்ட மேம்பாலம். ஜெமினி ஸ்டூடியோ இங்கு அமைந்திருந்ததால், ஜெமினி மேம்பாலம் என அழைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பெயரை அண்ணாவின் நினைவாக, அண்ணா மேம்பாலம் என பெயரிட்டார் கருணாநிதி.
20 ஆயிரம் வாகனம் பயணம்: மேலும், 1974 -ம் ஆண்டில், குதிரைப் பந்தயத்தை தடை செய்ததை நினைவுகூரும் வகையில்குதிரையைக் கட்டுப்படுத்தும் மனிதன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் சராசரியாக 20 ஆயிரம் வாகனங்கள் இப்பாலத்தில் பயணிக்கின்றன. இப்பாலத்தை, சிஆர்ஐடிபி 2021-22-ம் திட்டத்தின்கீழ் ரூ.8.85 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தூண்கள் மறுவடிவமைப்பு: அதன்படி, இப்பாலத்தின் தூண்களை GRC பேனல்கள் கொண்டு மறுவடிவமைப்பு செய்யவும், இப்பாலத்தின் கீழே பொலிவூட்டும் வகையில் பசுமை செடிவகைகள் அமைக்கவும், பொது மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்போது அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT