Published : 21 Dec 2022 04:15 AM
Last Updated : 21 Dec 2022 04:15 AM
புதுச்சேரி: பாஜகவின் மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம். புதுச்சேரி மாநில அந்தஸ்து போராட்டத்தை தீவிரமாக்குவோம் என்று 60 சமூக நல அமைப்புகள் அறிவித்துள்ளன.
புதுச்சேரியில் மாநில அந்தஸ்துக்காக ஒருங்கிணைந்து செயல்படும் 60 சமூக நல அமைப்புகளின் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் அழகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதால் மாநிலத் தகுதி கேட்டு எம்எல்ஏநேரு தலைமையில் 60-க்கும் மேற்பட்ட சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வருகிறோம். புதுவை, காரைக் காலில் கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றி முதல்வரிடம் மனு அளித்தோம்.
அப்போது முதல்வர், ‘மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பு இல்லை, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. மாநிலத் தகுதி கிடைத்தால்தான் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும். அன்றாடம் மன உளைச்ச லோடு உள்ளேன்’ என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் நியமன எம்எல்ஏ ராமலிங்கம், சமூக நல அமைப்புகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு சமூக அமைப்புகள் சார்பில் பதில் தரப்பட்டது. இந்த நிலையில், பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் 2 அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி பேரவைத்தலைவரிடம் சமூக அமைப்பு தலைவர்களின் மீது உரிமை மீறல், வழக்கு பதிவு செய்ய கோரியுள்ளனர்.
மாநில தகுதி கேட்டு போராடுவது பற்றி கூறாமல், 60 சமூக நல அமைப்புகளை மிரட்டும் நோக்கில் உரிமை மீறல், வழக்கு என்ற பூச்சாண்டிக்கு சமூக நல அமைப்புகள் அஞ்சப் போவதில்லை. மாநில மக்களின் நலன் கருதி, மாநிலத் தகுதி கேட்டு உயிரைக் கொடுத்தாவது 60 சமூக நல அமைப்புகளும் போராடும்.
எனவே, மாநிலத் தகுதி கேட்டு தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்யவும், மக்களைத் திரட்டிப் போராடவும், இன்னும் தீவிரமாக செயல்படவும் 60 சமூக நல அமைப்புகளும் முடிவு செய்துள்ளன. பாஜகவினரின் மிரட்டலுக்கு அடிபணியாமல் உரிமை மீறல், வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT