

புதுக்கோட்டை: தமிழகத்தில் உள்ள குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்காக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.70 லட்சத்தில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் பேசியது: 2018-ல் வீசிய கஜா புயலால் ஆலங்குடி தொகுதி பெரும் பாதிப்பைச் சந்தித்தது. கடும் பொருளாதார நெருக்கடியால் உயர்கல்வி படிக்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, ஆலங்குடியில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும் என அதிமுக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால், அதே கோரிக்கை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதுடன், வாடகைக் கட்டிடத்தில் நிகழாண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இக்கலைக் கல்லூரிக்கு கீழாத்தூரில் 12 ஏக்கரில் ரூ.16 கோடியில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் புதிய கட்டிடத்தில் கல்லூரி செயல்படும். கீரமங்கலத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தில் காட்டாறுகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கஜா புயலில் முற்றிலும் சேதமடைந்த 35 ஆயிரம் வீடுகள் உட்பட மொத்தம்65 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. தற்போது, தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டுவதற்கான கணக்கெடுப்பு பணியும் நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழல் துறையின் மூலம் வடகாட்டில் ரூ.7 கோடியில் பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள குளம் மேம்படுத்தப்படும்.
முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளை மேம்படுத்துவதற்கு அக்கறை காட்ட வேண்டும். அதற்காக நம் பள்ளி எனும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். கடந்த முறை திமுக ஆட்சியில் செயல்படுத்தி வந்த அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டம் ஆகியவற்றை அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் கிடப்பில் போட்டிருந்தது. மீண்டும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணியையும் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன், ஊராட்சித் தலைவர் மணிகண்டன், பள்ளித் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.