

விவசாயிகளின் போராட்டத்தை தமிழக அரசு அலட்சியப்படுத்தாமல், உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலை ஏற்பட்டு, விவசாயம் பொய்த்துப் போன நிலையில், நம்பிக்கை இழந்த விவசாயிகள் இதுவரை 4 பெண்கள் உட்பட 45க்கும் மேற்பட்ட விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ 25 ஆயிரம், இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்திட வேண்டும்.
சென்ற ஆண்டு கொடுக்காமல் உள்ள பயிர் இன்சூரன்ஸ் தொகைகளையும், கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்கிட வேண்டிய தொகையினை வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்தினர்.திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மேற்கொண்ட முற்றுகை போராட்டத்தில் பங்கு பெற்ற முத்துப்பேட்டை ஒன்றியம் கோவிலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆர்.மகாலிங்கம் (வயது 47) மாரடைப்பால் மரணடைந்துள்ளார்.
தொடர் போராட்டமாக நடைபெறுகின்ற இப்போராட்டம் குறித்து தமிழக அரசு மவுனம் காப்பது மிகுந்த கவலைக்குரியது.45க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ள நிலையில் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
தமிழக அரசு விவசாயிகளுடைய போராட்டத்தை அலட்சியப்படுத்தாது உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.