

சென்னை: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய குழாய் இணைப்புப் பணி நடைபெற இருப்பதால், திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (டிச.21) குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் நாளை காலை 8 முதல் இரவு 8 மணி வரை இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட திரு.வி.க.நகர், அயனாவரம், ஏகாங்கிபுரம், பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள 8144930216, 8144930217 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.