Published : 20 Dec 2022 06:34 AM
Last Updated : 20 Dec 2022 06:34 AM
பொன்னேரி: பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 44 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆண்டிக்குப்பம் மீனவர்கள் மீன் பிடிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி அடுத்த பழவேற்காடு அருகே உள்ளது ஆண்டிக்குப்பம் மீனவ கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராஜா, தவமணி என ஒரு தரப்பும் சங்கர், செல்வம் என மற்றொரு தரப்பும் என இரு பிரிவாக பிரிந்து பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடிப்பது தொடர்பாக இவ்விரு தரப்பினருக்கிடையே கடந்த ஓராண்டாக மோதல் இருந்து வருகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில் ராஜா, தவமணி தரப்பினர் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் பழவேற்காடு ஏரியில் இந்த தரப்பினர் மீன்பிடிக்கச் செல்லலாம் எனவும் அவர்களை யாரும் தடுக்க கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக ஆண்டிக்குப்பம் மீனவர்களிடம் கடந்த சில நாட்களாக வருவாய் மற்றும் மீன்வளத் துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதிலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் ராஜா, தவமணி தரப்பினர் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க உரிமை கோரி, கடந்த 17-ம் தேதி காலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடை பயணம் செல்ல முயன்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆண்டிக்குப்பத்தில் இருதரப்பு மீனவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். தவமணி தரப்பைச் சேர்ந்த 3 மீனவரின் வீடுகளில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன. மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர். இதில், 3 பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் சங்கர், செல்வம் தரப்பைச் சேர்ந்த 38 பேர் மற்றும் ராஜா, தவமணி தரப்பைச் சேர்ந்தவர்கள் என 44 பேர் மீது திருப்பாலைவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த ஆண்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இந்நிலையில், ஆண்டிக்குப்பத்தில் அமைதி திரும்பும் வரை பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தடைவித்தார். இதனிடையே ராஜா, தவமணி தரப்பைச் சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர், எதிர்தரப்பினரை கைது செய்யக்கோரி, மறியலில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT