Published : 20 Dec 2022 06:48 AM
Last Updated : 20 Dec 2022 06:48 AM

சிறுபான்மையினரின் பாதுகாப்பு இயக்கம்: அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில் பழனிசாமி பெருமிதம்

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை வானகரம் ஜீசஸ் கால்ஸ் வளாக கன்வென்ஷன் மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி, தென்னிந்திய திருச்சபை முன்னாள் பிரதம பேராயர் ஜி.தேவகடாட்சம், பாதிரியார்கள் ஸ்டான்லி செபாஸ்டியன், எஸ்.ராஜாசிங், இந்திய சுவிசேஷ திருச்சபை பாதிரியார்கள் எஸ்.ராபின் ராஜ்குமார், ஜே.சார்லஸ் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளைச் சார்ந்த ஏ.சி.சண்முகம், க.கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ, என்.ஆர்.தனபாலன் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கமாக அதிமுக இருப்பதாக, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா, சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று, கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

புனித ஏசுபிரானின் அவதாரத்தை கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அனைத்துமக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் எம்ஜிஆர்தான் கிறிஸ்தவர்களை பிற்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தினார். ஜெயலலிதா ஆட்சியில் கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான ஜெருசலேம் சென்றுவர கிறிஸ்தவர்களுக்கு, தமிழக அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்பட்டது.

கிறிஸ்தவ பெருமக்களை கவுரவிக்கும் விதமாக அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த பாசப் பிணைப்பை எக்காலத்திலும் பிரிக்க இயலாது. இனி வரும் காலங்களில் இந்த பாசமும், நேசமும் வலுப்பெறும். சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கமாக அதிமுக என்றென்றும் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சென்னை உயர் மறை மாவட்ட விகார் ஜெனரல் ஸ்டேன்லி செபாஸ்டியன், இந்திய சுவிசேஷ திருச்சபையைச் சேர்ந்த ராபின் ராஜ்குமார், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பிரதம பேராயர் ஜி.தேவகடாட்சம், புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமாகா பொதுச் செயலாளர் விடியல் சேகர் சிறுபான்மையினர் நல ஆணைய முன்னாள் தலைவர் ஜான் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x