பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடங்கியது: சென்னையில் 29 சிறப்பு கவுன்ட்டர்கள்

பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடங்கியது: சென்னையில் 29 சிறப்பு கவுன்ட்டர்கள்
Updated on
2 min read

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு அறிவிக்கப்பட்ட தமிழக அரசு சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதையொட்டி, சென்னையில் 29 சிறப்பு கவுன்ட் டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. ஜனவரி 13-ம் தேதி வெள்ளிக் கிழமை போகிப் பண்டிகை, 14-ம் தேதி சனிக்கிழமை தைப்பொங்கல், 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாட்டுப் பொங்கல், 16-ம் தேதி திங்கள்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவது வழக்கம். மக்கள் சொந்த ஊருக்குச் சென்றுவர வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களின் வசதிக்காக இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு போக்குவரத்துக் கழகங் கள் சார்பில் சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள், வெளிமாநிலங்களின் முக்கிய நகரங்களுக்குச் செல்ல தினமும் இயக்கப்படும் 2,275 பேருந்து களுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கூடுதலாக 4,445 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட 3 நாட்களில் மொத்தம் 11,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களில் இருந்து 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 6,423 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வழக்கமான விரைவு பேருந்துகளில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், மேற்கண்ட சிறப்பு பேருந்துகளில் தற்போது டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

தென் மாவட்டங்களுக்கு வழக்கமாகச் செல்லும் விரைவு பேருந்துகளில் முன்பதிவு முடிந்து, சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. மாலையில் பணி முடித்து இரவில் புறப்படத் திட்டமிட்டுள்ளவர்கள் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

நீண்ட தொலைவு (300 கி.மீ.க்கு மேல்) செல்லும் சிறப்பு பேருந்து களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள கோயம்பேட்டில் 26, தாம்பரம் (மெப்ஸ்) 2, பூந்தமல்லி - 1 என மொத்தம் 29 சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பதற்கான பணி நடந்து வருகிறது. சிறப்பு கவுன்ட்டர்கள் வரும் 9-ம் தேதி திறக்கப்படும். இங்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். www.tnstc.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 3, 4, 5, 6 ஆகிய நடைமேடைகளில், முன்பதிவு செய்தவர்களுக்கான அரசு விரைவு பேருந்துகளும், 7, 8, 9 ஆகிய நடைமேடைகளில் முன்பதிவு இல்லாத விரைவு பேருந்துகளும் இயக்கப்படும். 1, 2 நடைமேடைகளில், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற குறுகிய தொலைவு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in