

பணமில்லாத பரிவர்த்தனை முறைகளைக் கடைபிடிக்கவேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் நேற்று வெளியிட்டிருக்கும் பத்திரிகை குறிப்பில் ''துணைவேந்தர்களும், பதிவாளர்களும் தமது பல்கலைக்கழகங்களிலும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும் பணமில்லாத பரிவர்த்தனை முறைகளைக் கடைபிடிக்கவேண்டும், தினசரி நடைமுறைகளுக்கு எலக்ட்ரானிக் பரிவர்த்தனையைக் கையாளவேண்டும்'' என கூறியுள்ளார்.
ஆளுநரின் இந்த உத்தரவு மாநில அரசின் அதிகாரத்திலும் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்திலும் தலையிடுவதாக உள்ளது.
தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது இவ்வாறு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. பொறுப்பு ஆளுநரின் இந்த சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்குத் தமிழக ஆளுநர் வேந்தராக உள்ளார். தமிழகப் பல்கலைக்கழகங்களுக்குப் பொதுவான சட்டம் இல்லை. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதற்கான சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அவற்றில் வேந்தரின் அதிகாரம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
''பட்டமளிப்பு விழாக்களுக்குத் தலைமை தாங்குவது, துணைவேந்தருடன் ஆலோசித்து ஒரு சில பொறுப்புகளுக்கு நியமனம் செய்வது, பல்கலைக்கழக நிர்வாக செயல்பாடு சரியாக இருக்கிறதா என்பதை அறிய அதன் ஆவணங்களைப் பார்வையிடுவது'' ஆகியவையே ஒரு வேந்தரின் அதிகாரங்களாகப் பல்கலைக்கழக சட்டங்களில் குறிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆளுநர் பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவு இவை எவற்றிலும் உள்ளடங்கவில்லை.
தமிழக பொறுப்பு ஆளுநர் தமிழக அரசின் அதிகாரங்களில் தலையிடுவது இந்திய கூட்டாட்சித் தத்துவத்துக்கே உலை வைப்பதாகும்.இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை ஜனநாயக சக்திகள் கண்டிக்க முன்வரவேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.