

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் நேற்று முன்தினம் மட்டும் 31,488 பேர் பார்வையிட்டு, ரூ.11,93,000-க்கு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
மாவட்ட நூலகத் துறையின் சார்பில், கள்ளக்குறிச்சியில் உள்ள சென்னை புறவழிச்சாலை திடலில் வரும் கல்லை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. கடந்த15-ம் தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா வரும் 25-ம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவின் ஒருபகுதியாக பெண்களுக்கான சிறப்புமருத்துவ முகாமும் நடைபெறுகிறது.
நேற்று மட்டும் 2,825 பெண்களுக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதில் கர்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ள நபர்களுக்கு மேற்சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நேற்று, புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பேசுகையில், “ விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமையன்று (நேற்று முன்தினம்) 39 பள்ளிகளைச் சேர்ந்த 1,493 பள்ளி மாணவ மாணவியர்களும், 2 கல்லூரிகளைச் சேர்ந்த 155 மாணவ மாணவியர்களும், 1,252 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும், 28,588 பொதுமக்களும் என மொத்தம் 31,488 நபர்கள் ஒரே நாளில் புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். இந்த ஒரே நாளில் மட்டும் ரூ.11,93,000 மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
புத்தகத் திருவிழாவிற்கு மக்கள்எளிதில் சென்று வரும் வகையில் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உரிய பாதுகாப்பு வசதிகள், அவசர மருத்துவஉதவிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாள்தோறும் ரூ.1,000-க்கு புத்தகம் வாங்குபவர்களுக்கு ரூ.5,000 மதிப்பிலான பரிசுப் பொருட்களும், ரூ.2,000 க்கு புத்தகம் வாங்குவர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களும்,ரூ.5,000-க்கு புத்தகம் வாங்குபவர்களுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் ஆகியவை குலுக்கல்முறையில் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். கோட்டாட்சியர்கள் சு.பவித்ரா,ஜெ.யோகஜோதி மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பதிவுத்துறை ச.ரூபியா பேகம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சு.ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.