

தமிழகம், புதுச்சேரியில் அனைத்து நீதிமன்றங்களின் கருவூலங்களில் இருப்பில் உள்ள வழக்குகளில் தொடர்புடைய ரூபாய் நோட்டுகளின் எண்கள், வழக்கின் ஆவணங்களுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கி மாற்றிக்கொள்ளலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் மாவட்டம் மற்றும் கீழமை நீதிமன்ற கருவூலங்களில் இருப்பில் உள்ள வழக்குகளில் தொடர்புடைய ரூ.5 கோடியே 80 லட்சத்தில் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் வாதிடும்போது, “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து நீதிமன்ற கருவூலங் களில் இருப்பில் உள்ள வழக்குகள் தொடர்புடைய பணத்தின் எண்கள், வழக்கின் தீர்ப்பு நகல்களுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் எப்போது வேண்டு மானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
மேலும், நவ.8-ம் தேதிக்கு பின்னர் (500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்ட நாள்) பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை என்ன செய்வது என்பதை தமிழக அரசு முடிவு செய்துகொள்ளலாம்” என்றார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.