Published : 20 Dec 2022 04:20 AM
Last Updated : 20 Dec 2022 04:20 AM

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய மீனவர் குடும்பம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் லட்சுமணன், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தங்கி மீன்பிடித்து வந்தார். பூம்புகாரில் உள்ள மீனவர்கள், வெளியூர் சென்று மீன் பிடிக்க கிராம பஞ்சாயத்தார் ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், லட்சுமணன் குடும்பத்தினர் ஊர் கட்டுப்பாட்டை மீறி வெளியூரில் தங்கி மீன் பிடித்து வந்த காரணத்தால், அவர்களை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து, ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, லட்சுமணன் குடும்பத்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனைவி, மகன்கள் உட்பட குடும்பத்தார் 8 பேருடன் லட்சுமணன் தீக்குளிக்க முயன்றார். அப்போது, 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, லட்சுமணன் மகன் வினோத், இவரது மனைவி குணவதி ஆகிய 2 பேரும் நேற்று ஆட்சியர் அலுவலத்தில் உள்ள கொடிக் கம்பம் அருகில் அடுப்பு மூட்டி, சமையல் செய்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த போலீஸார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து, போலீஸார் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x