

விடுமுறை நாட்களில் சென்னையி லிருந்து திருநெல்வேலிக்கு வந்து 4 ஆண்டுகளாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பட்டதாரி மாணவர்களில் ஒருவர் போலீஸாரிடம் சிக்கினார். இவர்கள் 200 சவரன் வரை திருடியது தெரியவந்துள்ளது.
பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக் கிழமை அடுத்தடுத்து 2 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சிவப்பு வண்ண மோட்டார் சைக்கிளில் வந்திருந்தனர். மாநகரிலுள்ள அனைத்து போலீஸ் நிலையங் களும் உஷார்படுத்தப்பட்டன. பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே சிவப்பு வண்ண மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்களை போலீஸார் நிறுத்தினர். பின்புறம் இருந்தவர் இறங்கி ஓடிவிட்டார். மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் பிடிபட்டார். அவரிடம் 17 சவரன் நகைகள், ரயில் டிக்கெட் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவர் சென்னை, தாம்பரம், முத்தமிழ்நகர் 3-வது தெருவை சேர்ந்த ராஜசேகர் மகன் சீனிவாசன் (21). எம்.ஏ. பட்டதாரி. தப்பி ஓடியவர் சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த எல்ராயன் (23). பொறியியல் பட்டதாரி. இவர்கள் சென்னையிலிருந்து வார இறுதி நாள்களில் திருநெல்வேலிக்கு ரயிலில் வந்துவிடுவர்.
திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, சிவப்பு வண்ணத்திலான மோட்டார் சைக்கிளில் மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் செல்வர். தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைகளை பறித்துள்ளனர்.
200 சவரன் திருட்டு
இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளாக திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுவரை 200 சவரன் நகைகள் வரை திருடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெண்களிடம் நகைகளை பறித்துவிட்டு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். நகை பறித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோதுதான் சீனிவாசன் பிடிபட்டுள்ளார். தப்பி யோடிய எல்ராயனை போலீஸார் தேடிவருகின்றனர்.