Published : 20 Dec 2022 04:25 AM
Last Updated : 20 Dec 2022 04:25 AM

கலப்பு திருமணம் செய்ததால் எங்களை விரட்டுகிறார்கள்: ராணிப்பேட்டை குறைதீர்வு கூட்டத்தில் விவசாயி கண்ணீர் மல்க மனு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.படம்: ப.தாமோதரன்.

ராணிப்பேட்டை: கலப்பு திருமணம் செய்ததால் உறவினர்கள் விரட்டுகிறார்கள் என விவசாயி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வந்து குறைதீர்வு கூட்டத்தில் கண்ணீர் மல்க நேற்று மனு அளித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், சமூக பாதுகாப்பு துறை துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, துணை ஆணையர் (கலால்) சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முரளி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தனர்.

இதில், நெமிலி வட்டம் பெரும்புலிபாக்கம் விவசாய கூலித்தொழிலாளியான கேசவன் (37) என்பவர் அளித்த மனுவில், "கடந்த 2014-ம் ஆண்டு ராஜேஸ்வரி (37) என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்துக்கொண்டேன். 2017-ம் ஆண்டு எங்கள் திருமணத்தை முறையாக பதிவு செய்துள்ளேன். இந்நிலையில், காவேரிப்பாக்கம் ஒன்றியம் சங்கரன்பாடியில் உள்ள என்னுடைய மூதாதையர் இடத்தில் வீட்டு கட்டும் பணிகளை மேற்கொண்டால், எனது உறவினர்கள் மற்றும் அங்குள்ளவர்கள் வீடு கட்டக்கூடாது என கலப்பு திருமணம் செய்ததால் எங்களை விரட்டுகிறார்கள்.

இது குறித்து அவளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நான் குடும்பத்துடன் வாழ்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஆற்காடு வட்டம் கரிக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த தேவகி (68) என்பவர் அளித்த மனுவில், "நான் மேற்குறிப்பிட்ட பகுதியில் வசித்து வந்தேன். அதே பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் சமையலராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தற்போது, ஆதரவற்ற நிலையில் தங்கையின் பராமரிப்பில் வசித்து வருகிறேன். மேலும், எனக்கு உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவ செலவுக்கும் போதிய பணம் இல்லாமல் தவித்து வருகிறேன்.

சமையலராக பணியாற்றி ஓய்வு பெற்றதற்கு, இதுவரை துறை சார்பில் எந்தவொரு பணப்பலனும் கிடைக்கவில்லை. அவற்றை வழங்கவும், முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். காவேரிப்பாக்கம் ஒன்றியம் அவளூர் ஊராட்சி மன்றத் தலைவர் பார்வதி ராஜாமணி அளித்த மனுவில், "அவளூர் காலணி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விரைவில் அங்கு பகுதி நேர நியாய விலை கடை அமைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மேல்விஷாரம் எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர் மற்றும் சாதிக் பாஷா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை. விரைவில் மாற்று இடம் வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 350 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான மனுக்களை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x