ஆன்லைன் சூதாட்டத் தடை | 162வது பிரிவின்படி ஏன் ஆணை பிறப்பிக்கக்கூடாது? - அன்புமணி கேள்வி
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய 162வது பிரிவின்படி ஏன் ஆணை பிறப்பிக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டம் இயற்றப்பட்டு இன்றுடன் 63 நாட்கள் ஆகி விட்ட நிலையில், அதற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுப்பதற்கான அவசியத்தை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கி 2020ம் ஆண்டு வரை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். அதன் காரணமாகவே அதை தடை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. அதன்பயனாக 2020ம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 2021ம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டதால் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வந்தன.
ஆனால், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து மீண்டும் சூதாட்டங்கள் தலைதூக்கின. அதற்கு இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி போராடியதன் பயனாகவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அக்டோபர் ஒன்றாம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.அதற்கு மாற்றாக அக்டோபர் 18ம் தேதி சட்டம் இயற்றப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் மிக நீண்ட போராட்ட வரலாற்றை நான் பட்டியலிட்டதற்கு காரணம்.. கிட்டத்தட்ட 100 உயிர்களை பலி கொண்டு அவர்களின் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டியது எவ்வளவு அவசியம், எவ்வளவு அவசரம் என்பதை உணர்த்துவதற்காகத் தான். ஆனால், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 63 நாட்கள் ஆகும் நிலையில், அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க மறுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் குறித்து ஆளுனர் எழுப்பிய ஐயங்களுக்கு அரசு விளக்கம் அளித்து விட்டது. சட்ட அமைச்சரும் ஆளுனரை நேரில் சந்தித்து ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆளுனரை அமைச்சர் சந்தித்து 19 நாட்கள் ஆகி விட்டன. அதன்பிறகும் ஆளுனர் ஒப்புதல் அளிக்காததை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஆளுனர் காலவரையின்றி ஒப்புதல் அளிக்காமல் இருந்தால், அது சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கத்தை சிதைத்து விடும். எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு பொருள் குறித்து சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும் போது, அவசரம் கருதி அதே பொருள் குறித்து நிர்வாக ஆணை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 162வது பிரிவு கூறுகிறது. அதனால், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க முடியும்.
தமிழ்நாட்டில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 162 பயன்படுத்தப்பட்டதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சமூகநீதி வழங்கும் நோக்கத்துடன் மருத்துவக் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 15.09.2020 அன்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அதன்பின் 45 நாட்கள் ஆகியும் அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்குள்ளாக நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைத் தொடங்கி விட்டதால், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அத்தகைய அவசர சூழலை சமாளிக்கும் நோக்குடன் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி அப்போதைய அரசு நிர்வாக ஆணை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து அந்த சட்டத்திற்கு ஆளுனரும் ஒப்புதல் அளித்தார்; உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
7.5% இட ஒதுக்கீடு வழங்கி நிர்வாக ஆணை பிறப்பிப்பதற்கு எத்தகைய அவசரமும், அவசியமும் ஏற்பட்டதோ, அதே அவசரமும், அவசியமும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிப்பதற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து பேரவையில் சட்டம் இயற்றப் பட்டதால், அதற்கு முன் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் கடந்த நவம்பர் 27-ஆம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. அதன்பின் 16 நாட்களில் 6 பேர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதற்கு இதை விட அவசரமும், அவசியமும் இருக்க முடியாது. இவற்றையும் கடந்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கிறது. அதனால், இந்த விஷயத்தில் நிர்வாக ஆணை பிறப்பிக்க அரசு தயங்க வேண்டியதில்லை.
அதுமட்டுமின்றி, இது மாநில அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்துவது தொடர்பான விவகாரம் ஆகும். எனவே, தமிழக அரசு எந்த தயக்கமும் இல்லாமல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 162-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும்; அதை நீதிமன்றங்களில் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
