

"புயல், மழை ஏற்பட்டவுடன் மக்களை அவர்கள் பகுதியிலிருந்து வெளியேற்றி கல்யாண மண்டபங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவது மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கை அல்ல"
வார்தா புயல் எந்த அளவு தலைநகர் சென்னையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களே சாட்சிகளாக உள்ளன.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இதைவிட மோசமான நிலையை சென்னையும், அதன் புறநகர் பகுதிகளும் சந்தித்தன. பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டதால் சென்னை அதற்கான பொலிவை மீண்டும் பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட பேரிடரிலிருந்து நாமும், நமது அரசும் பாடம் கற்றுக் கொண்டோமா என்று கேட்டால்? நீண்ட நேரம் யோசித்து.... இல்லை என்ற பதிலையே கூற வேண்டி உள்ளது.
இல்லை என்று கூறுவதால் மட்டுமே நாம் இனி நமது தவறுகளிலிருந்து தப்பித்து விட முடியாது.
"இனிவரும் காலங்களில் தமிழகம் அதிகமான இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்ளப்போகிறது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நாம் தயார் நிலையில் இருப்பது மிக அவசியம்" என்று கூறுகிறார் சுற்றுச்சூழல் நலன்கள் சார்ந்து இயங்கும் பூவுலகு நண்பர்கள் அமைப்பின் ஜி. சுந்தர்ராஜன் அவர்கள்,
வார்தா புயல் தாக்கம் பற்றிய அவருடனான நேர்காணல்,
வார்தா புயலின் தாக்கத்தை அதற்காக தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஒர் சூழியல் ஆர்வலராக நீங்கள் எப்படி பார்கிறீர்கள்...
பொதுவாக புயல், மழை ஏற்பட்டவுடன் மக்களை அவர்கள் பகுதியிலிருந்து வெளியேற்றி கல்யாண மண்டபங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவதைத்தான் நாம் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக பார்க்கிறோம். ஆனால் உண்மையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது இயற்கைப் பேரிடர்கள் சார்ந்து முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதுதான்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.சுந்தர்ராஜன் | பூவுலகின் நண்பர்கள்
கடலுக்கு அடியில் தினந்தோறும் மாற்றம் நடந்து கொண்டு வருகிறது. மிக முக்கியமானதாக புவி வெப்பமயமாதல் காரணமாக கடலின் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது.
2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஓர் ஆய்வறிக்கை என்ன கூறுகிறது என்றால், இனி தமிழகம், குறிப்பாக கிழக்கு கடற்கரை தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களிலும் அதிகமான புயல் தாக்கம் இருக்கும்.
அதாவது புவி வெப்பமயமாதல் காரணமாக கடலின் வெப்பநிலை அதிமாகி, அதிகமான எண்ணிக்கையில் புயல்கள் இனி வரும் காலங்களில் மேற்சொன்ன மாநிலங்களில் உருவாகும் என்று அந்த ஆய்வுக் கூறுகிறது.
இனி பருவநிலைகள் அதிகமான மழையைக் கொண்டிருக்கும், அதிகமான புயலை ஏற்படுத்தும், அதிகமான வெயிலையும் அளிக்கும். விளைவு அதிகமான வறட்சியை ஏற்படுத்தும். இதைத்தான் அந்த ஆய்வு மறைமுகமாக தெரிவிக்கிறது.
முன்பெல்லாம் நமது தாத்தா, பாட்டிகள் காலத்தில் நூறு அல்லது ஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை புயல் வந்தது என்று கூறியிருப்பார்கள். ஆனால், இனி பெரும் மழைக்கும், பெரும் புயலுக்கு இடையேயான காலம் மிகக் குறைவாக இருக்கப் போகிறது.
சென்ற வருடமும் நாம் இதே போன்ற ஒரு நிலையை எதிர் கொண்டோம். 2-3 வாரத்துக்கு பெய்ய வேண்டிய மழை இரண்டு நாட்களில் பெய்தது. இதே போன்று நிலைமை அடிக்கடி ஏற்பட போகிறது.
இவை எல்லாம் ஒரு சூழியல் ஆய்வாளராக எனக்கு உணர்த்துவது ஒன்றைத்தான், இனி சூழலை பற்றி நாம் அதிகமாக கவலைப்பட வேண்டும். என்பதே அது.
தமிழக அரசு தாம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எதில் தவறியது.... மரங்கள் அதிக எண்ணிக்கையில் விழக் காரணம் என்ன....
மரங்கள் அதிகமான எண்ணிக்கையில் விழுந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் என்ன? இந்த மண்ணுக்கு ஏற்ற மரங்கள் நடப்படவில்லை. மற்றொன்று மரத்தை சுற்றி சாலைகளையும், கான்கீரிட்களையும் அமைத்து விடுகிறார்கள்.
படம்: ஆர். ரகு
உதாரணத்துக்கு மேலை நாடுகளை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மரத்துக்கு இரு புறங்களிலும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டுத்தான் சாலை அமைப்பார்கள். அவ்வாறு அமைக்கும் போது அம்மரத்துக்கு தேவையான நீர் மற்றும் சத்துகள் செல்ல வழி ஏற்படுகிறது.
வேம்பு, புளிய மரம் போன்ற நம் மண்ணுக்குகேற்ற மரங்களை நட்டாலும் இடைவெளியே இல்லாமல் கான்கீரிட் போடுவதால் அவற்றுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதில்லை. அதனால் இம்மரங்களும் விழுங்கின்றன.
இந்த நிகழ்வை பாடமாக எடுத்துக் கொண்டு நமது மண்ணுகேற்ற மரங்களை அதிகளவில் நட வேண்டும். அத்துடன் மரங்களுக்கு போதிய இடைவெளி விட்டு சாலைகள் அமைக்க வேண்டும்.
அடுத்தது புயல் வருவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை நிறுத்துவது சரி. ஆனால், புயல் கடந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும் மின் இணைப்புகள் அளிக்க முடியாமல் இருப்பது நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தவற்றையே காட்டுகிறது.
இதற்கு மின் ஒயர்கள் அனைத்தையும் நிலத்துக்கு அடியில் கொண்டு செல்வதில் தவறில்லை என்று கருதுகிறேன்.
எதிர்காலத்தில் இயற்கைப் பேரிடர்கள் எதிர்கொள்வதற்கு நீங்கள் கூறும் ஆலோசனை.....
வடகிழக்குப் பருவ நிலையை பற்றிய முழு ஆய்வுகள் தேவை. பொதுவாகவே வடகிழக்குப் பருவ மழை என்பது இந்தியாவில் தமிழ் நாட்டுக்கு மட்டுமே நன்மையோ, தீமையோ செய்யும் தன்மை உடையது (அதிகமாக மழை பொழிவது அல்லது மழை பொழியாமல் வறட்சியை ஏற்படுத்துவது).
இப்படி இருக்க இதனைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வு பல்வேறு அறிவியல் சார்ந்த துறைகளை ஒன்றிணைத்து செய்யப்பட வேண்டியது. இதனை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.
இறுதியாக நாம் பேரிடர்களை சந்திக்கக் கூடிய நகரமா என்று கேட்டால்? ஆம், சென்னை பேரிடர்களை சந்திக்கக் கூடிய நகரமாகத்தான் இனி இருக்கும்.
ஆனால் பேரிடர்களை தாங்கக் கூடிய நகரமாக இருக்குமா என்றால்? நிச்சயம் கிடையாது எனவே இயற்கை பேரிடர்களை மட்டுப்படுத்துவதையும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கருத்தில் கொண்டும் தமிழக அரசு செயல்பட வேண்டும்.