

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் வானிலிருந்து பறந்து வந்து விழுந்த பலூனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையும் ஒன்று.
இந்த மாளிகையை சுற்றி சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகைக்கு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே செல்ல முடியும். அங்கு பணி செய்பவர்கள்கூட பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படு கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆளுநர் மாளிகைக்குள் பலூன் போன்றதொரு மர்ம பொருள் காற்றில் பறந்து வந்து விழுந்தது. இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு பிரிவு போலீஸார் மற்றும் கிண்டி போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் பிரிவினர் சென்று சோதனை நடத்தினர்.
ஆளுநர் மாளிகையில் பறந்து வந்து விழுந்தது, வானிலை ஆய்வுக்காக பறக்கவிடப்பட்ட சென்சார் பொருத்திய பலூன் என்றும், அது காற்றின் வேகம் குறைந்ததால் ஆளுநர் மாளிகை மைதானத்தில் விழுந்ததும் தெரியவந்தது. அதன் பிறகே பரபரப்பு அடங்கியது.