

உடுமலை: பூமி, சூரியன், நிலவு குறித்து வேதங்களில் காணப்படும் அரிய தகவல்களுக்கு முன்னோர்களின் ஆழ்நிலை தியானமே காரணம் என பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனர் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் உள்ள உலக சமாதான ஆலயத்தில் 33-வது பிரபஞ்ச மகாதவ வேள்வி அறங்காவலர் கே.விநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனர் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பேசியதாவது: உலகில் வாழும் மனிதர்களில் பலர் நான்தான் பெரியவன் என்ற எண்ணத்துடன் வாழ்கின்றனர். இந்த சிந்தனைதான் அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்கிறது. இந்நிலை மாற அமைதி நிலவ வேண்டும்.
போர் தவிர்க்கப்பட வேண்டும். உலகில் 5 நாடுகள் மட்டுமே உலக பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக இருந்து, அந்நாடுகள் மட்டுமே எந்த முடிவையும் எடுக்கும் நிலை உள்ளது. இவர்களை கட்டுப்படுத்தவே தெய்வீகம், தியானம் தேவைப்படுகிறது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவை டயாமீட்டரால் வகுத்தால் கிடைக்கும் விடை 108. இதேபோல பூமிக்கும், நிலவுக்குமான தொலைவையும் கணக்கிட்டால் அதன் அளவும் 108. இதுபோன்ற பல அரிய தகவல்களை நமது முன்னோர் எழுதிச்சென்றுள்ளனர். ரிக் வேதத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்படி எழுதப்பட்டது என்ற ஆராய்ச்சியில், அப்போது வாழ்ந்தவர்களின் ஆழ்நிலை தியானமே இந்த சாதனைகளுக்கு காரணம் என்பது புலப்படுகிறது.
அமைதியான சூழலில் இருந்து நாம் இந்த உலகை காணும்போது பிரபஞ்சத்தை உணர முடியும். பூமி, இயற்கையை சிலர் அழிக்கத் துடிக்கின்றனர். மரங்களை அழிப்பதால், பூமியின் வெப்பம் மேலே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பனி உருகத் தொடங்கும். அதனால் கடல் மட்டம் உயரும். ஒரு மீட்டர் அல்லது 2 மீட்டர் உயர்ந்தால், சென்னை மாநகரம் போன்ற நகரங்களே மூழ்கிவிடும்.
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 10 கிமீ நீளமுடைய எரிகல் மெக்சிகோவில் விழுந்தபோது பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, டயனோசர் என்ற பெரும் இனமே அழிந்தது. இதுபோலவே 26,000 எரிகற்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அவை பூமியை தாக்காமல் தடுப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதைபோலவே பூமிக்கு வெளியே செயற்கை கோள்கள் அனுப்புவதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறியதும், பெரியதுமாக 36,500 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். அதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் இப்பணிகள் நிறைவேற்றப்படும். உலக நாடுகள் அனைத்துக்கும் பூமியை பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து உலக நலன் வேண்டி குருமகான் பிரமிடு வடிவ அறைக்குள் சென்று தவத்தில் ஈடுபடும் நிகழ்வு நடைபெற்றது. 21 நாட்கள் கழித்து ஜனவரி 8-ம் தேதி தவம் முடிந்து குருமகான் வெளியே வருவார் என ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.மகேந்திரன், அறக்கட்டளை தலைவர் பி.விஸ்வநாதன், பொதுச்செயலாளர் கே.எஸ்.சுந்தரராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.