Published : 19 Dec 2022 04:03 AM
Last Updated : 19 Dec 2022 04:03 AM

அன்னூர் தொழிற்பேட்டை | மாசு ஏற்படுத்தாத ஆலைகள் மட்டுமே அமைக்கப்படும்: விவசாயிகளிடம் எம்.பி. ஆ.ராசா உறுதி

கோவை: அன்னூர் அருகே தொழிற்பேட்டை அமைக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது எனவும், மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும் எனவும் எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.

கோவை அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக, அன்னூரை அடுத்த குழியூரில் எம்.பி. ஆ.ராசா தலைமையில் போராட்டக் குழு பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின், விவசாயிகள் மத்தியில் ஆ.ராசா பேசியதாவது: விவசாயிகள் விருப்பம் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் 1,600 ஏக்கர் ஒரே சதுரமாக இருக்க வாய்ப்பில்லை என என்னிடம் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் தொழில்துறை செயலாளர், டிட்கோ தலைவர், அமைச்சருடன் செல்போனில் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது, விவசாய நிலங்கள் தவிர்த்து நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க முடியுமா என ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் போராட்டக்காரர்கள், அதிமுக எம்எல்ஏ, நான் உட்பட 15 பேர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு ராணுவம் தொடர்பான உதிரிபாகங்கள் செய்யும் தொழிற்சாலை வரப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், தண்ணீர், தோல், சாயம் பயன்படுத்தப்போவதில்லை எனவும், கழிவுகள் வரவே வராது எனவும் அதிகாரிகள் கூறினர். மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலை மட்டுமே இங்கு அமைக்கப்படும். அதுவும், தனியார் நிலத்தில்தான்.

குழு அமைத்த பின் இங்கு வரும் தொழிற்சாலை தொடர்பாக இந்த குழுவை சேர்ந்தவர்கள் ஒப்புதல் அளித்தால்தான் தொழிற்சாலைகள் நிறுவப்படும். இல்லையெனில், அவை அமைக்கப்படாது. எதிர்கால சந்ததியினர் விவசாயத்தை நம்பி மட்டுமே இருக்க முடியாது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உரிய முறையில் வரும் தொழிற்சாலையை ஏற்கலாம். விவசாய நிலங்களுக்கு தொந்தரவு அளிக்கும் பணியை நிறுத்த வேண்டியது எனது பொறுப்பு. தொந்தரவு என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க வேண்டும்.

டிட்கோ தலைவர் பங்கேற்கும் கூட்டம் விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும். விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது. இருக்கும் விளைநிலங்களுக்கு எந்த கேடும் வரக்கூடாது. உயிருக்கும், உடலுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது. அப்படிப்பட்ட நிறுவனங்கள் அமையும் பட்சத்தில் கோவை மக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின் ‘நமது நிலம் நமதே’ போராட்டக் குழு தலைவர் குமார ரவிக்குமார் கூறும்போது, “விவசாய நிலங்கள் எடுக்கப்படாது என அரசின் அறிவிப்பு இருந்தாலும், தனியார் நிறுவனங்களின் நிலங்கள் குறித்து பேசப்பட்டது. 815 ஏக்கர் 85 இடங்களில் தனித் தனியாக உள்ளது. எனவே, இங்கு தொழில் பூங்கா அமைப்பது சாத்தியமில்லை. இதுதொடர்பாக டிட்கோ தலைவருடன் பேச்சுவார்த்தை நடக்கும். ஆ.ராசாவின் பேச்சு நிறைவாகவும், நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது. எந்த கட்சியும், எந்த அமைப்பும், எந்த தனி நபரும் இந்த போராட்டத்துக்கு உரிமை கோர முடியாது” என்றார்.

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் பூமா, அன்னூர் வட்டாட்சியர் தங்கராஜ், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x