

கோவை: கோவை அன்னூர் அருகே தொழிற்பேட்டை அமைக்கும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று அன்னூர் தாலுகா, அக்கரை செங்கப்பள்ளியில் பிரச்சார நடைபயணம் நடந்தது.
இந்த நடை பயணத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தொடங்கிவைத்து பேசுகையில், “ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரத்து செய்த தமிழக அரசு, அதேபோல் இங்கும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்க வேண்டும்.
போராட்டக் குழுவினர் முதல்வரை சந்தித்து பேசுவதற்கு நேரம் பெற்று தர வேண்டும். விவசாய நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார். உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து பேசுகையில், “தமிழக அரசு எந்த காரணத்தைக் கொண்டும் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்கக்கூடாது” என்றார்.
கரியாகவுண்டனூர், கரியனூர், சொலவம்பாளையம், ஆலாங்குட்டை, அழகேபாளையம் உள்ளிட்ட 16 கிராமங்கள் வழியாக, 30 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் நடைபெற்றது.