

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் ரூ.120.24 கோடியில் நடந்துவரும் தூர்வாரும் பணியை தமிழக அரசின்தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் மொத்த உயரமான 23.3 அடியில் 10 அடிக்கு மேல் மண்ணால் தூர்ந்து இருந்தது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும்வடகிழக்கு பருவமழைக்கு பின்னர்மதுராந்தகம் ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டினாலும் அடியில் மண் சேர்ந்திருப்பதால் மழைநீரை கூடுதலாக சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஏரி நிரம்பி வீணாக உபரிநீர் கடலில் சென்று கலந்துவந்தது. இதையடுத்து மதுராந்தகம் ஏரியை தூர் வார வேண்டும் என்று மதுராந்தகம் மற்றும் அதனைசுற்றியுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து ஏரியை தூர்வார தமிழக அரசு ரூ.120.24 கோடி ஒதுக்கியது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி மதுராந்தகம் ஏரியை தூர்வாருவதற்கான பூமி பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏரியை ஆழப்படுத்தி தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், மதகுகள் மற்றும் பாசன கால்வாயை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஏரி தூர்வாரும் பணியை நேற்று தமிழக அரசின்தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார். தூர்வாரும் பணிகள் எத்தனை சதவீதம் முடிந்துள்ளது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் பணிகள் அதிகம் உள்ள இடங்களை விரைந்து முடிக்குமாறு அப்போது அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது நீர்வள ஆதாரத் துறை செயலாளர் சந்திப் சக்சேனா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலர்மேனுவல்ராஜ் மற்றும் வருவாய்த் துறை, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.