

சென்னை: சென்னை சுங்கத் துறை அலுவலகத்தில் ரூ.91.64 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய அலுவலக வளாகத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
சென்னை பாரிமுனை ராஜாஜிசாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் ‘வைகை’ எனும் புதிய அலுவலக வளாகம் கட்டப்படுகிறது. ரூ.91.64 கோடி செலவில் 2 அடித் தளங்கள், 9 தளங்களுடன் இக்கட்டிடத்தை வரும் 2024-ம்ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது ஏற்றுமதி - இறக்குமதியை நெறிப்படுத்துவது தொடர்பான அரசு அமைப்புகளின் அலுவலகங்கள் இந்த வளாகத்தில் அமைய உள்ளன.
இந்நிலையில், இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு, புதியஅலுவலக வளாகத்துக்கு அடிக்கல்நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:
தொழில் துறையினருக்கு வசதிகளை பெருக்குவதற்காக இந்தியாதன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அதன் அடையாளமாக இந்த வளாகம் உருவாக்கப்படுகிறது. தொழில் துறையினருக்கான வசதிகளை பெருக்கும் வகையில் கட்டுமானங்கள் அமைவதோடு மட்டுமின்றி, ஆற்றல் சேமிப்புடன், பசுமை கட்டிடங்களாக, பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் இவைஅமைய வேண்டும். வருங்காலத்தில் கட்டப்பட உள்ள அரசு கட்டிடங்களுக்கு முன்னுதாரணமாக இந்த ‘வைகை கட்டிட வளாகம் திகழும்.
வேறொரு இடத்தில் கட்டிடப் பகுதிகள் உருவாக்கப்பட்டு, பின்னர் கட்டுமான இடத்துக்கு கொண்டு வந்து இக்கட்டிடம் எழுப்பப்பட உள்ளது. இதனால், கட்டுமான இடத்தில் பணியை கணிசமாக குறைக்கும். கட்டுமானக் காலமும் குறையும். சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தனித்துவமிக்க முன்னெடுப்பு: விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய மத்திய மறைமுக வரிகள், சுங்கத் துறை வாரிய தலைவர் விவேக் ஜோரி, ‘‘தொழில் துறையினரின் வசதிகளுக்கான செயல் திட்டத்தில் ‘வைகை’ வளாக உருவாக்கம் தனித்துவமிக்க முன்னெடுப்பாகும்.
இதன்மூலம், வரி நிர்வாகத்தின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதியை துரிதப்படுத்தும்’’ என்றார். மத்திய மறைமுக வரிகள், சுங்கத் துறை வாரிய உறுப்பினர் வி.ரமா மேத்யூ, சென்னை மண்டலசுங்கத் துறை தலைமை ஆணையர் எம்விஎஸ் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.