கருவேல மரங்களை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

கருவேல மரங்களை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Updated on
1 min read

கருவேல மரங்களை முழுமையாக அகற்றாவிட்டால் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதி மன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் எம்.பட்டுராஜன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்ற கிளை வரை சாலையோரத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்ற மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி வழக்கறிஞர் சுரேஷ்குமார் வாதிடும்போது, “மாவட்ட நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை சாலையோரத்தில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மாநகராட்சி இடங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனியார் இடங்களில் உள்ள மரங்களை மாநகராட்சியால் அகற்ற முடியாது. நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை பொதுப்பணித் துறையினர்தான் அகற்ற வேண்டும்” என்றார்.

கருவேல மரங்களை அகற்றும் பணி மெத்தனமாக நடைபெறுவதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “மலையை அகற்றச் சொன்னால் உடனடியாக செயல்பட்டு வெட்டி எடுத்துவிடுகிறீர்கள். மதுரையில் பல மலைகளை காணவில்லை. ஆனால், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதிக்கும் கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை.

ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். அரசு விழாக் கள், அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் பங்கேற்பது மட்டும் அதிகாரிகளின் வேலையில்லை. கருவேல மரங்களை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நீதிமன்றம் கண்காணிக்கும். தவறும்பட் சத்தில் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

பின்னர், விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், கருவேல மரங்கள் அகற்றப்பட்டது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in