Published : 19 Dec 2022 04:23 AM
Last Updated : 19 Dec 2022 04:23 AM
திருச்சி: திருச்சி மாநகரை அழகுபடுத்தவும், நவீனப்படுத்தும் வகையிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன்படி, ரூ.32 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள 3 திட்டங்களை, இந்த மாத இறுதியில் திருச்சி வரும்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கவுள்ளார் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
கீழரண் சாலை நவீன லாரி முனையம்: திருச்சி மாநகராட்சி சார்பில் கீழரண் சாலையில் ரூ.14 கோடியில் நவீன லாரி முனையம் கட்டும் பணிகள் 2021-ல் தொடங்கின. 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் ஒரே நேரத்தில் 85 லாரிகளை நிறுத்த முடியும். இந்த வளாகத்துக்குள் லாரிகள் வந்து செல்லும் நேரங்கள் கணினியில் பதிவு செய்யப்படவுள்ளன.
மேலும் கேன்டீன், வணிக அலுவலகம், கடைகள், ஓட்டுநர்களுக்கான ஓய்வு அறைகள், குளியலறைகள், பஞ்சர் சீரமைக்கும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் இருந்து அனைத்து அம்சங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த லாரி முனையம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் கீழரண் சாலையின் இருபுறமும் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, வாகன போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலைக்கோட்டை தெப்பக்குளம் ஒலி- ஒளி காட்சி அமைப்பு: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் நவீன வகையில், செயற்கை நீரூற்றுடன் கூடிய ஒலி- ஒளி காட்சிக் கூடம் அமைக்கும் பணிகள் 2020-ல் தொடங்கின. ரூ.3.50 கோடியில் நடைபெற்று வரும் இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
லேசர் விளக்கொளியின் மூலம் தண்ணீரை திரையாகக் கொண்டு, திருச்சி நகரம் மற்றும் மலைக்கோட்டை கோயில் உள்ளிட்டவற்றின் சிறப்புகள், வரலாறு, தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை திரையிடப்படவுள்ளன. இதை, படித்துறை மற்றும் தெப்பக்குளத்தின் கரையோரம் நின்றவாறு பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம். இந்தத் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் வகையில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் சர் சி.வி.ராமன் ஸ்டெம் பூங்கா: ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் ரூ.14.90 கோடியில் சர் சி.வி.ராமன் ஸ்டெம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு வழியில் அடிப்படை அறிவியல், கணிதம் ஆகியவற்றை கற்றுத் தரும் வகையில் 12,500 சதுர மீட்டர் பரப்பில் இந்தப் பூங்கா அமைக்கும் பணிகள் 2021-ல் தொடங்கி முடிந்துள்ளன.
கணித மாதிரிகள், விளையாட்டு வழி கண்காட்சிகள், முக்கோணவியல், பித்தாகரஸ் தேற்றம், வானியல் மற்றும் விண்ணுலக பொருட்கள் குறித்த 360 டிகிரி டிஜிட்டல் கோளரங்கம், பெண்டுலம் செயல்பாடு என பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் விளையாடும் வகையில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த 3 திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT