Published : 19 Dec 2022 04:25 AM
Last Updated : 19 Dec 2022 04:25 AM

வேலூர் - காட்பாடி சாலை விரிவாக்க பணிகள் ஒரே நாளில் நிறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

வேலூர்-காட்பாடி சாலையில் விருதம்பட்டு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: ‘இந்து தமிழ் திசை’ செய்தியின் எதிரொலியாக வேலூர்-காட்பாடி சாலையில் விருதம்பட்டு பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் ஒரே நாளில் நிறைவு பெற்றதையடுத்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

வேலூரில் இருந்து காட்பாடிக்கு புதிய பாலாறு வழியாக செல்லும்போது விருதம்பட்டு விஷ்ணு திரையரங்கம் அருகில் இருந்து குமரன் மருத்துவமனை வரை சாலை விரிவாக்க பணிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, சாலையின் இரண்டு பக்கமும் பலப்படுத்தும் பணி நடைபெற்றது.

இந்த பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் அகலமான புதிய தார்ச்சாலை அமைப்பதற்காக பாலாறு பாலத்தில் தொடங்கி குமரன் மருத்துவமனை வரை சாலையில் இயந்திரங்களை கொண்டு கீறல்கள் போடப் பட்டன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட கீறல்களால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

குறைந்த வேகத்தில் வாக னங்களை இயக்க முடியாமல் இருந்ததுடன் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வந்தன. எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' நாளிதழில் ‘விபத்தை ஏற்படுத்தும் சாலை பணிகள்' என்ற தலைப்பில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை சீரமைக்கும் பணிகளை நேற்று காலை தொடங்கினர். முதற்கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சாலை அமைத்ததுடன் புதிய பாலாறு பாலத்தில் தொடங்கி குமரன் மருத்துவமனை வரை முழுமை யான சாலை அமைக்கப்பட்டது.

தற்போது, இந்த சாலை போக்குவரத்துக்கு விசாலமான சாலையாக மாறியிருப்பதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும், அவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x