

மறைந்த மாபெரும் தமிழகத் தலைவர் ஜெயலலிதாவுக்கு தெலுங்கு திரையுலகம் அஞ்சலி செலுத்தியுள்ளது.
புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குநரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தாசரி நாராயண ராவ் மற்றும் பல தெலுங்கு கலைஞர்கள் ஜெயலலிதாவுடனான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தாசரி நாராயண ராவ் கூறும்போது, “அவர் (ஜெயலலிதா) என்னை ‘அண்ணய்யா’ என்று பாசமாக அழைப்பார். நானும் என் மனைவியும் அவரைச் சந்தித்த போது எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
நாங்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளோம். போயஸ் தோட்டத்தில் படப்பிடிப்பு நடத்திய பெருமையை எனக்கு வழங்கியவர் ஜெயலலிதா” என்றார்.
மூத்த நடிகை ஜமுனா, தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட போது, “முதல்வராக இருக்கும் போது கூட தன் காலத்தில் நடித்த சக நடிகைகளுடன் தொடர்ந்து நட்பாக இருந்தார் ஜெயலலிதா” என்று கூறிய ஜமுனா, தனக்கு பணக்கஷ்டம் ஏற்பட்ட காலத்தில் பிக்சட் டெபாசிட்டாக ரூ.10 லட்சம் அளித்து உதவியதாக தெரிவித்தார்.
“அவர் அதிகம் பேசமாட்டார். திரைப்பட காலக்கட்டத்தில் அவர் அதிகம் பேசக்கூடியவர் அல்ல. ஆனால் மிகவும் இளகிய மனம் படைத்தவர், சில சமயங்களில் குழந்தையைப் போல்தான் அவர் பழகுவார். அவர் ஒரு புத்தகப்புழு. அறிவுஜீவி. தான் வகித்த பதவிக்கு மரியாதை தேடித் தந்தவர் ஜெயலலிதா” என்று நினைவு கூர்ந்தார் ஜமுனா.
மூத்த தெலுங்கு நடிகரும், திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர் ராஜேந்திர பிரசாத் தனது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்ததோடு, தனக்கு ஜெயலலிதா தாயைப் போன்றவர் என்றார்.