Published : 18 Dec 2022 04:23 AM
Last Updated : 18 Dec 2022 04:23 AM

சசிகலாவால் எனக்கும் குடும்பத்தினருக்கும் ஆபத்து: ஜெ.தீபா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

ஜெ.தீபா | கோப்புப் படம்

சென்னை: சசிகலாவால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தில் பல்வேறு தகவல்களை சசிகலா கூறியிருந்தார். ஆனால், சசிகலா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானவை என ஜெ.தீபா குற்றம்சாட்டியிருந்தார். இதையொட்டி ஜெ.தீபா வெளியிட்ட ஆடியோவில் கூறியிருப்பதாவது:

எனது தாய் விஜயலட்சுமி பற்றிபேசுவதற்கு சசிகலா என்ற 3-வதுநபருக்கு எந்த தகுதியும் இல்லை. இதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பிரதமர் நரசிம்மராவிடம் அத்தையை (ஜெயலலிதா) பற்றி எனது தாய் புகார் கூறியதாக சசிகலா கூறி இருப்பதில் உண்மை இல்லை.

சசிகலா கூறுவதுபோல என்தாய் விஜயலட்சுமி, கருணாநிதியையோ, வாழப்பாடி ராமமூர்த்தியையோ சந்தித்து பேசியதே இல்லை. இவ்வாறு என் தாய் மீது அவதூறு பரப்பும் சசிகலா மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். எனது அத்தைக்கு சசிகலாவால் ஆபத்து உள்ளது என்றே அப்போது புகார் அளிக்கப்பட்டது.

சுதாகரன் திருமணத்தால்.. வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தால்தான் அத்தைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இடையேமனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் சசிகலா அவர் மீதுள்ள தவறுகளையெல்லாம் மறைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல கூறியுள்ளார். அத்தைக்கு என்னை பிடிக்காது, எனது சகோதரர் தீபக்கை மட்டுமே பிடிக்கும் என்று சொல்வதும் பொய்.

சுதாகரன் திருமணம் முடிந்ததும் என் தந்தை இறந்துவிட்டார். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதேபோல, எத்தனையோ சந்தேகங்கள் சசிகலா மீது உள்ளன. எனது அத்தைக்கு ஏற்பட்ட அனைத்து களங்கங்களுக்கும் சசிகலாவே காரணம். அத்தையின் மரணத்தில் அவர்களது செயல்கள்தான் சந்தேகத்தை ஏற்படுத்தின. அனைத்து உண்மைகளும் நிச்சயம் ஒருநாள் வெளியில் வரும்.

என் தம்பியை கெடுத்து, என்அப்பாவைக் கொன்று, அத்தையை கொன்று, என் வாழ்க்கையை அழித்து, எனது வயிற்றில் வளர்ந்தகுழந்தையையும் சசிகலா அழித்துள்ளார். எனது தாய் இறந்ததற்குகூட அத்தையை வரவிடாமல் செய்தவர்தான் சசிகலா.

அரசு நடவடிக்கை தேவை: அரசியலைவிட்டு சசிகலா விலக வேண்டும். அவர் எப்படிஇத்தனை கோடிகளை சம்பாதித்தார். இதுகுறித்து அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் கேட்கவேண்டும். தமிழக அரசு தாமதமின்றி சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் நிச்சயமாக ஆபத்து உள்ளது. அதற்கு பயந்துதான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மீண்டும் சொல்கிறேன். எனது தாயைப் பற்றி பேசியதற்கு சசிகலா பதில் சொல்லியே தீர வேண்டும். இவ்வாறு அந்த ஆடியோவில் ஜெ.தீபா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x