

தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது.
ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஆட்சியை ஆட்டி வைப்பவர்கள் உள்ளிட்டோர் தப்பி விடக்கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார். #ITraid என்ற ஹேஷ்டாக் கீழ் அவர் தனது ட்வீட்களை பதிவு செய்துள்ளார்.
மம்தா பானர்ஜி கண்டனம்:
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பதிவு செய்த கருத்துகளில், "முன்பு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் முதன்மைச் செயலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி அத்துமீறியது. தற்போது தமிழக தலைமைச் செயலர் வீட்டில் சோதனை நடத்துகிறது.
எதற்காக இத்தகைய முறையற்ற, நெறியற்ற, பழிவாங்கும் நடவடிக்கைகள் ஏவப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானவை.
அமித் ஷா உள்ளிட்டோர் மீது இத்தகைய நடவடிக்கைகள் பாயாதது ஏன்?
ஊழலை உறுதியுடன் ஒழிக்க வேண்டும். ஆனால், தமிழக தலைமைச் செயலர் மீதான இந்த நடவடிக்கை குடிமைப் பணியியல் அமைப்பினை இழிவுபடுத்தும் செயல்.
மாநிலத்தின் தலைமை செயலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சில வரைமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.