

சென்னை: அரசு மருத்துவர்கள் 4 பேர் மீது நடவடிக்கை எடுத்த அமைச்சரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் கடந்த 15-ம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினர். அப்போது மருத்துவர்கள் மெர்லின், பிராபவதி, கிருத்திகா, அர்ச்சனா பாலாஜி ஆகிய 4 பேரின் கையொப்பம் பதிவேட்டில் இல்லை. இதையடுத்து, 4 மருத்துவர்கள் மீதும் துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
மேலும், இதைக் கண்காணிக்காத செங்கல்பட்டு இணை இயக்குநர் ரமாமணியை உடனடியாக வேறு மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யுமாறு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த 4 மருத்துவர்களில் இருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 2 நாட்கள் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னொரு மருத்துவர் 24 மணி நேர பணியை முடித்து ஓய்வில் இருந்துள்ளார். நான்காவது மருத்துவர் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளார்.
வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டிய இடம் காலியாக இருக்கும்போது, என்ன காரணம் என்று அமைச்சர் பொறுமையாக விசாரித்து இருக்க வேண்டும். அதைவிடுத்து, உயிர்காக்கும் மருத்துவர்கள் மீது அதிரடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதும், இடமாற்றம் செய்வதும் இதுவரை நடந்ததில்லை.
பதவி உயர்வுக்கான கலந்தாய்வு: ஏற்கெனவே, வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொண்ட ஆய்வின்போது, மருந்து இல்லாததற்கும், கட்டிடம் பழமையானது என்பதற்காகவும் அங்குள்ள பெண் மருத்துவர்களை கன்னியாகுமரிக்கு மாற்ற அமைச்சர் உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்ட முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அந்த உத்தரவை ரத்து செய்தார். அதேபோல, பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் நியாயம் கேட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையெல்லாம் தமிழக முதல்வர் விரும்ப மாட்டார் என நம்புகிறோம்.
பெண் மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது தொடர்வது, ஒட்டுமொத்த மருத்துவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அமைச்சரின் உத்தரவை ரத்து செய்வதுடன், மருத்துவர்களை தொடர்ந்து பழிவாங்கும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் மன நிம்மதியுடன் பணி செய்யும் சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.